உலக சுற்றுச்சூழல் தினம் – ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வாழ்த்து!

நமது பூமியை பாதுகாத்து, வருங்கால தலைமுறைகளுக்கான நிலையான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ம் தேதி அன்று உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day) கொண்டாடப்படுகிறது. புவிக்கோளையும் இயற்கையையும் காப்பாற்றுவதற்கான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை (UNEP) இத்தினத்தை உருவாக்கியது. இது சுற்றுச்சூழலை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகளின் முதன்மை விழிப்புணர்வு தினமாக விளங்குகிறது. இந்த நிலையில் இன்று சுற்றுசூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தமிழ்நாட்டு மக்களுக்குத் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாள், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக நமது சுற்றுச்சூழலை பாதுகாத்து பேண வேண்டியுள்ள கூட்டுப்பொறுப்பை நினைவூட்டுகிறது. இயற்கை அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கிறது; அதன் நுண்ணிய சமநிலையை பாதுகாப்பது நமது கடமையாகும்.

தமிழ்நாடு, இயற்கையுடன் ஒத்துழைந்து வாழும் சிறப்பான பாரம்பரியத்தை கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஏற்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், கழிவுகளை குறைத்தல் மற்றும் உயிரியல் பல்வகைமையை காத்தல் ஆகியவற்றின் மூலம் நிலைத்த வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துவோம்.

ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக இளைஞர்களும், பசுமையான, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். தனிநபர் மட்டத்தில் செய்யப்படும் சிறிய முயற்சிகள் கூட, சமூகமெங்கும் இணைந்தால் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

நமது பூமியை பாதுகாத்து, வருங்கால தலைமுறைகளுக்கான நிலையான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.