உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா அணியை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் நடப்பாண்டில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கு இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான, தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் நடைபெற்ற குரூப்-ஏ லீக் போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கும்பி, சிகந்தர் ராஜா, ரியன் பர்ல் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால்.., நிர்ண்யிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஜிம்பாப்வே அணி 408 ரன்களை குவித்தது. அமெரிக்க அணி சார்பில் அபிஷேக் பரத்கர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை கடப்பது இதுவே முதன்முறையாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக கென்யா அணிக்கு எதிராக 351 ரன்களை குவித்ததே, ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.
இதனையடுத்து ஆடிய அமெரிக்க அணி 25.1 ஓவரில் 104 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது. ஜிம்பாப்வே அணியினர் 3 ரன் அவுட்கள் செய்து அசத்தினர். இந்த போட்டியில் சிக்கந்தர் ராஸா, ரிச்சர்ட் கராவா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த குவாலிஃபையா் லீக் போட்டியில் ஜிம்பாப்வே 4 போட்டிகளிலும் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க அணி நான்கு போட்டிகளிலும் தோற்று லீக் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. நடப்பாண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 317 ரன்களுடன் இந்தியா வீழ்த்தியதன் மூலம், இந்தியா முதலிடத்திலும், தற்போது ஜிம்பாப்வே அமெரிக்காவை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், 2008ம் ஆண்டில் நியூசிலாந்து அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி 290 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது இடத்திலும் உள்ளன.







