கோவையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

கோவையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த பொம்மனம்பாளையம் அருகே கொட்டமுத்து அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் செந்தில் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை டியூசனுக்கு சென்று அவரது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது கொட்டத்து அம்மன் கோயில் அருகே காட்டு யானை ஒன்று எதிரே வந்துள்ளது. அதை பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட செந்தில், தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். அப்போது, காட்டு யானை பின் தொடர்ந்து சென்று செந்திலை தாக்கியுள்ளது. இதில் குழந்தைகள் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த செந்திலை வனத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் இடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.