மகளிர் உரிமைத் தொகை: தேர்வு செய்யப்பட்டவர்கள் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சோதனை…!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வானவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவதற்கு முன்பாக ஒரு ரூபாயை அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.  தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வானவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவதற்கு முன்பாக ஒரு ரூபாயை அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 

தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேசன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன.

இதில் முதற்கட்டமாக 704 ரேசன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.55 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கிக்கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் செல்போன் வழியாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.