மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2026: மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்புச் சாம்பியனான இந்திய அணி, 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நாத் பர்கேடா சர்வதேச விளையாட்டு வளாகத்தில் நவம்பர் 27 – வெள்ளிக்கிழமை மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – மலேசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணி அதிரடியாக விளையாடி மலேசிய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. முதல் கால்பகுதியில் இந்தியாவின் தாக்குதல் ஆட்டத்தை மலேசிய அணி தனது தற்காப்பு ஆட்டத்தின் மூலம் தடுக்க முயன்றது. இருப்பினும், ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மும்தாஜ் கான் கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது கால்பகுதியில் 3 கோல்கள்!

இரண்டாவது கால்பகுதியில் இந்திய அணியின் தாக்குதல் ஆட்டம் மேலும் தீவிரமடைந்தது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இரண்டு மலேசிய வீராங்கனைகளின் தடுப்பையும் மீறி முன்னேறிய நவ்நீத் கவுர் அற்புதமாக கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். தொடர்ந்து 25-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தொடரின் அதிக கோல்கள் அடித்த வீராங்கனையான தீபிகா கோல் அடித்தார்.

இதற்குப் பதிலடியாக 27-வது நிமிடத்தில் மலேசியாவின் நூர் அசார் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். ஆனால், இந்திய அணி உடனடியாக பதிலடி கொடுத்தது. 30-வது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பில் தீபிகா கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

மூன்றாவது கால்பகுதியிலும் இந்தியாவின் ஆதிக்கம்!

மூன்றாவது கால்பகுதி தொடங்கிய 33-வது நிமிடத்தில் சுனேலிதா டோப்போ கோல் அடித்து இந்திய அணியின் முன்னிலையை 5-1 என உயர்த்தினார். தீபிகாவின் பெனால்டி கார்னர் முயற்சியில் கிடைத்த பந்தை சிறப்பாகப் பயன்படுத்தி அவர் இந்த கோலை அடித்தார். தொடர்ந்து இந்திய அணி மிட்ஃபீல்டு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி மலேசிய அணிக்கு வாய்ப்பளிக்காமல் விளையாடியது. இந்திய வீராங்கனை இஷிகா தனிநபராக மேற்கொண்ட சிறப்பான முயற்சி கோலாக மாறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது.

இறுதியில் 6-2 என அபார வெற்றி!

கடைசி கால்பகுதியில் மலேசிய அணி கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக 52-வது நிமிடத்தில் நூர் அமிரா ஷகிரா சுல்கிப்லி ரிவர்ஸ் ஸ்டிக் முறையில் அற்புதமாக கோல் அடித்தார். இதனால் மலேசிய அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இந்திய அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 57-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைத் தொடர்ந்து இஷிகா கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதிவரை இதே முன்னிலையைத் தக்கவைத்த இந்திய அணி, மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் தீபிகா 2 கோல்களும், மும்தாஜ் கான், நவ்நீத் கவுர், சுனேலிதா டோப்போ, இஷிகா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். மலேசியா தரப்பில் நூர் அசார், நூர் அமிரா ஷகிரா சுல்கிப்லி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதிப்போட்டியில் சீனாவுடன் பலப்பரீட்சை!

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சீனா அணி ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஜாங் ஹெய்யாங் வெற்றிக்கான கோலை அடித்தார். முன்னதாக நடைபெற்ற 5-வது இடத்துக்கான போட்டியில் தென் கொரியா அணி தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்புச் சாம்பியனான இந்திய அணி, 4-வது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.