வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்தது!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. அக்டோபர் மாதத்தில் இயல்பை காட்டிலும் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டது. ஆனால், நவம்பர் மாதத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாமலும், அநேக இடங்களில் குளிர் மற்றும் பனிப் பொழிவும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பாதை!
அதன்படி, சுமார் 1.5 கி மீ உயரம் வரை லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளிலிருந்து மத்தியக்கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
கனமழை:
இதன்காரணமாக, இன்று (நவம்பர் 28) தமிழ்நாட்டில், நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மிதமான மழை:
மேலும், திருப்பூர், ஈரோடு, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




