திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு – சிஆர்பிஎஃப் படையினர் குவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மலை முழுவதும் சிஆர்பிஎஃப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகைத் திருநாளில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவைத் தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனத் தொடரப்பட்ட 3 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது. தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் என இருதரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், மதியம் உத்தரவு பிறப்பித்தது.

அதில், “கார்த்திகை மாதம் முடிவடைவதற்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் ஒருமுறை தீபம் ஏற்றப்பட வேண்டும் என மனுதாரர்கள் கோரினர். தொடர்ந்து, மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தெரிவித்ததாவது: நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருப்பது கடும் வேதனையை அளிக்கிறது.

நீதிமன்ற உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படும்போது, அதனைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இத்தகைய சூழ்நிலைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இல்லையெனில், அது அரசியலமைப்பு சார்ந்த குழப்பத்துக்கு வழிவகுக்கும். நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படும்போது, எங்களால் செயலற்று அமர்ந்திருக்க முடியாது. எந்தவொரு அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடே உயர்ந்ததாகும். நீதித் துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது. இந்திய ஆட்சிப் பரப்புக்குள் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித் துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்துக்குத் துணைநின்று செயல்பட வேண்டும். நீதித் துறைக்கு சிவில் அதிகாரிகள் துணை நிற்பதைப் பிரிவு 144 உறுதி செய்கிறது.

மதுரையில் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்துகின்றன. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதிகாரிகள் மீதான அவமதிப்புக் குற்றச்சாட்டுகள் தெளிவாகின்றன” என்று தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாததற்கான பழியை கோயில் நிர்வாகத்தின் மீது மதுரை ஆட்சியர் சுமத்த முயற்சிப்பதாகக் கூறிய நீதிபதிகள், ஆட்சியரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

இந்த நிலைமையை ‘இரும்புக்கரம் கொண்டு’ கையாள வேண்டும். இல்லையெனில், அது அரசமைப்புச் சிக்கலுக்கு வழிவகுக்கும் என நீதிபதிகள் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் டாக்டர் சாய் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் டிசம்பர் 15 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று (நவ. 28) விளக்கேற்ற வேண்டும் என்றும், கடந்த 24ஆம் தேதி உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துச் சென்று மலைத் தூணில் ஏற்ற வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு பக்தரும் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தர்காவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; தர்கா செயல்படுவதில் எந்த வகையிலும் தடங்கல் இருக்கக்கூடாது. தர்கா மற்றும் கோயில் பகுதிகளை வேறுபடுத்தும் விதமாக அப்பகுதியில் வேலி அமைக்கலாம். தர்காவைப் பாதுகாக்கவும், அங்கு வருகை தரும் பக்தர்கள் தொழுகை நடத்த எந்தத் தடையும் ஏற்படாமல் இருப்பதையும் சிஆர்பிஎஃப் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து திருப்பரங்குன்றத்தில் சிஆர்பிஎஃப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மலை முழுவதும் நேற்று இரவு முதல் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.