ஜெயங்கொண்டம் அருகே கருக்கலைப்பு என்கிற பெயரில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கொளஞ்சிநாதன். இவரது மகன் வசந்த்குமார் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது எதிர்வீட்டில் வசித்து வருபவர் சுப்புலெட்சுமி (வயது 27). என்ற இளம்பெண். சுப்புலெட்சுமியின் தாய் தந்தை இருவரும் ஏற்கனவே இறந்த நிலையில் தாத்தா நடராஜன் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். வசந்த்குமாருக்கும் சுப்புலெட்சுமிக்கு இடையே தொடர்பு இருந்துள்ளது. இவர்களின் நெருக்கமான நட்பினார் சுப்புலெட்சுமி கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் சுப்புலெட்சுமிக்கு திருமணம் செய்துவைக்க எண்ணி, அவரது தாத்தா மாப்பிள்ளை பார்த்து 2 வாரங்களில் திருமணமும் முடிக்க நிச்சயம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி அன்று வெளியே சென்ற சுப்புலெட்சுமி மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. இதுகுறித்து வெளியே தெரிந்தால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிடுவார்களோ என நினைத்து இரகசியமாகவே சுப்புலெட்சுமியை தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் கிருஷ்ணவேணியிடம் வந்த சுப்புலெட்சமி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தனக்கு 2 வாரத்தில் திருமணம் நடக்க இருப்பதால் வயிற்றில் உள்ள கருவை கலைக்கவேண்டும் எனவும், அதற்காக ஆகும் தொகையை கொடுத்துவிடுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தனது சொந்த ஊரில் வைத்து கருகலைப்பை செய்வதாக கூறி சுப்புலெட்சுமியை ஆண்டிமடத்துக்கு அருகேயுள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் செவிலியர் கிருஷ்ணவேனி. அங்கு தனது உறவினர் சிலரின் உதவியோடு சுப்புலெட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்து 8 மாத குழந்தையை வெளியேடுத்துள்ளனர். ஆனால் சுப்புலெட்சுமிக்கு இரத்தப்போக்கு நிற்காததால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் குழந்தையையும் வீட்டிற்கு பின்னால் குழிதோண்டி புதைத்துள்ளனர். ஆண்டிமடம் தனியார் மருத்துவமனையிலிருந்து சுப்புலெட்சுமியை ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுப்புலெட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சுப்புலெட்சுமியை அங்கேயே விட்டுவிட்டு, கிருஷ்ணவேனி மற்றும் அவரது கூட்டாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பித்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கிருஷ்ணவேனி, அவரது உறவினர்கள் மற்றும் சுப்புலெட்சுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வசந்த்குமார் அகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







