நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் சார்பில் தஞ்சாவூரில் ஹிமாச்சல் ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் விற்பனையாளராக ஜெஸ்ஸி ஃப்ளாரண்ஸ் என்பவரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து இருந்தது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 2013ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி ஜெஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து ஹிமாச்சல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெஸ்ஸி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 நாட்களில், அதே கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் ஜெஸ்ஸி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மதுரை கிளையில் வழக்கு தள்ளுபடியானதை மறைத்து, அதே கோரிக்கையுடன் சென்னையில் வழக்கு தொடர்ந்திருப்பதை ஏற்க முடியாது எனவும், நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் ஜெஸ்ஸி ஃப்ளாரன்ஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அண்மைச் செய்தி : மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் – டிஎன்பிஎஸ்சி விளக்கம்
அபராதத் தொகையை 2 வாரங்களுக்குள் உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும், அதுகுறித்து மார்ச் 23ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.







