தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரிய வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச்…

தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தொன்மையான தெய்வீக மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த போதும், துரதிருஷ்டவசமாக அது நடைமுறைக்கு வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

காசி தமிழ்ச்சங்கம் தவிர வேறு எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பதால், தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

கடந்த 1990-ம் ஆண்டுகளில் உருது, சிந்தி, இந்தி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் மேம்பாட்டுக்காக தேசிய கவுன்சில் அமைத்த மத்திய அரசு, செம்மொழியான தமிழ்மொழிக்கும் அதைப் போன்ற தேசிய கவுன்சிலை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, நான்கு வாரங்க்ளில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.