இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 ஃபாலோவர்ஸ்… கணவன் மீது புகாரளித்த பெண்!

இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் குறைந்ததற்காக கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

கணவன், மனைவி இடையே பல காரணங்களுக்கு சண்டை வந்து நாம் பார்த்துள்ளோம். ஆனால் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நிஷா என்ற பெண் தனது கணவர் மீது அளித்த புகார் ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷா. இவர் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தன்னை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட விடாமல் வீட்டு வேலை செய்ய சொல்வதாகவும், இதனால் இன்ஸ்டாகிராமில் தனக்கு இருந்த ஃபாலோவர்ஸ்களில் இரண்டு பேர் குறைந்துவிட்டதாகவும் கணவன் மீது புகார் அளித்துள்ளார். “கணவனின் வற்புறுத்தலால் துணி துவைப்பது, வீட்டை தூய்மையாக வைத்திருப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டேன். இதனால் ரீல்ஸ் பதிவேற்ற முடியாததால் என்னுடைய ஃபாலோவர்ஸ் குறைந்துவிட்டார்கள். நாளொன்றிற்கு நான் இரண்டு ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தேன். அதை செய்யாததால் ஃபாலோவர்ஸ் குறைந்துவிட்டனர்” என புகாரளித்துள்ளார்.

இதனிடையே, கணவர் விஜேந்தரமும் மனைவி நிஷா மீது புகார் அளித்துள்ளார். அதில், “தனது மனைவி முழு நேரமும் இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கிக் கிடந்து வீட்டு வேலைகளை கண்டுகொள்வதில்லை” என தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், இல்லற வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளனர். அதன் முடிவில், கணவன் மனைவி இருவரும் சண்டையில் தங்கள் பங்கை ஒப்புக்கொண்டு அமைதியாக சென்றுள்ளனர். ஆனாலும், இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.