இன்றும், நாளையும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (ஜூன் 14) நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழையும் கோவை, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மிக கனமழையும் தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை(ஜூன் 15) நீலகிரிக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 16, 17 தேதிகளிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.