போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, பறவைகள் வாயிலாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர் அளித்த பேட்டியில், போராட்டம் நடத்தும் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களிலேயே சிக்கன் பிரியாணி சாப்பிடுவதாக கூறி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அவர்கள் பறவைகாய்ச்சலை பரப்பும் சதியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். நாட்டைப் பற்றி கவலைப்படாமல் விவசாயிகள் இதுபோல செயல்படுவதாகவும் அவர் குறைகூறி உள்ளார். எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் வெறுமனே சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவை காய்ச்சலை பரப்புவதாகவும் மதன் திலாவர் தெரிவித்துள்ளார். கோழி இறைச்சியை வேகவைத்து உண்ணும் போது அதன் வாயிலாக பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.