வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடி செய்த பெண் கைது

கோவையில் வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஓர் மகளிர் விடுதிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்…

கோவையில் வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஓர் மகளிர் விடுதிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் சென்றுள்ளார். தன் பெயர் ராமலட்சுமி என்றும், சொந்த ஊர் மதுரை என்றும் அறிமுகமாகிய அவர் தான் வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் அதிகாரி என்று கூறி, அங்கு தங்குவதற்கு அறை கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அறை வழங்கப்பட்டுள்ளது.

அந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி வேலைக்குச் சென்று வரும் நிலையில்,  அவர்களிடமும் தன்னை வருமான வரித் துறை அதிகாரி என்று சொல்லி அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார். அனைவரிடமும் சகஜமாக பேசவே அவரை நம்பியுள்ளனர். அங்குள்ள பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். சில நாள்களுக்கு முன்பு அவசர வேலை என்று சொல்லி 2 பெண்களிடம் 2 லேப்டாப்களை வாங்கியுள்ளார். மற்றொரு பெண்ணிடம் ரொக்கமாக ரூ.30,000 வாங்கியுள்ளார். பிறகு லேப்டாப் மற்றும் பணத்துடன் அவர் மாயமாகியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், ராமலட்சுமியை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் இதேபோல பல்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு பெயர்களில் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.