கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகத்தில் சிதிலமடைந்த சுமார் பத்தாயிரம் அரசுப் பள்ளிக் கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப் போவதாகக் கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும், இன்னும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பள்ளிகளுக்கான தரமான கட்டடங்கள் இல்லாமல், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.
ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படும் நிதியை திமுக அரசு பெருமளவில் குறைத்திருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், பணி நியமனத்துக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழகப் பள்ளிகள் அணி தேர்வு செய்து அனுப்பப்படவில்லை. மாணவர்களை வஞ்சித்துவிட்டு துறைகள் மீது மாற்றி மாற்றி திமுக அரசு பழி போடுகிறது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற்று, ஏழை எளிய மாணவர்கள் தரமான கல்வி பெருவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.







