சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் ஓடாது என போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நிலத்தடி நீர் எடுக்க அனுமதி அளிப்பதாக வாய்மொழி ஒப்புதல் அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நிஜலிங்கம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி வழங்கக் கோரி இன்று முதல் 15 ஆயிரம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக நிஜலிங்கம் அறிவிந்திருந்தார்.
இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக நிஜலிங்கம் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ”தாம்பரம் கோட்டாட்சியர் முன்னிலையில் 9 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து நிலையில் உள்ள போர் உரிமையாளருக்கும், முறையான அனுமதி கொடுப்பதாக கூறியுள்ளார்கள். 2 அனுமதி வழங்கியுள்ளனர். மின் இணைப்பு வழங்கவில்லை. போராட்டத்தை வாபஸ் வாங்கினால் நாளை அனுமதி வழங்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே போல் மற்ற மாவட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் அனுமதி வேண்டி கோரிக்கை வைத்திருக்கிறோம்
சென்னை போக்குவரத்தில் அதிக வழக்கு பதிவு செய்கிறார்கள். அதனை முறைபடுத்த வேண்டும். மஞ்சம்பாக்கம், அம்பத்தூர் குடிநீர் வாரியத்தில் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள். திருவள்ளூர் ஆட்சித்தலைவரை சந்திக்க உள்ளோம். சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளையும் சந்திக்க உள்ளோம். சுமூக தீர்வு எட்டியதால் நடக்கவிருந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.” இவ்வாறு நிஜலிங்கம் பேட்டியளித்தார்.







