தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள், வாக்குறுதிகள் என அரசியல களம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. இதற்கு நடுவே தேர்தல் எத்தனை கட்டங்களாக நடக்கபோகிறது என்பது , தற்போது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.
இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறலாம் என செய்திகள் வெளிவர, இதை திமுக எதிர்க்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். மேலும் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றால் வீணான பிரச்னைகள் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார் .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த மாதம் தமிழக கட்சிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா அடங்கிய குழு, தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியது. ஆளுங்கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக உட்பட அனைத்து கட்சிகளுமே தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவே கோரிக்கை விடுத்தன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்காத இடத்தில் ஒரு கட்டமாகதேர்தல் நடக்குமா என்பது விவாதப்பொருளானது.
கடந்த 2016ம் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாகவே நடைபெற்றாலும், சில முறைகேடுகள் காரணமாக தஞ்சாவூர் ,அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
1952ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டும் அல்ல சுதந்திர இந்தியா சந்தித்த முதல் தேர்தல் அது. அப்போது இருந்த சவால்களை எதிர்கொள்ள பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதை தவிர்த்து தமிழகத்தில் நடந்த அனைத்து சட்டமன்ற தேர்தல்களும் ஒரே கட்டமாகதான் நடைபெற்றுள்ளன.
இந்த முறை 2 கட்டமா? ஒரே கட்டமா என்று பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இது, தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தாலும், தமிழகத்தில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த விவகாரம் ஓயப்போவதில்லை.