2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 நவம்பரில் பழைய 500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தபோது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் அந்த நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டாலும், பின்னா் அதனை அச்சிடுவதையும் புழக்கத்தில் விடுவதையும் ஆா்பிஐ குறைத்துக் கொண்டது.
அதைத் தொடா்ந்து, கடந்த மே 19-ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்தது. அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மக்களவையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்புள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள அந்த பதிலில், ‘இப்போதைக்கு அது தொடா்பான பரிசீலனை ஏதுமில்லை. இப்போது புழக்கத்தில் உள்ள பிற ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் பரிசீலனையும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







