கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள முள்ளுர் பகுதியில் நள்ளிரவு குட்டிகளுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி
சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில்
அமைந்துள்ள முள்ளூர் பகுதியில் இரவு நேரத்தில் குட்டிகளுடன் காட்டு யானை
கூட்டமாகச் சாலையில் உலா வந்து சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபட்டும் வாகனங்களை
மறித்தபடி நின்றன.
இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வீடியோ பதிவு
செய்துள்ளனர். குறிப்பாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த
சில நாட்களாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால்
வனத்துறையினர் வாகன மூலம் ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.







