மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வாயில் காயம்பட்ட காட்டுயானை பாகுபலி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்லார் பாக்கு தோப்பில் நுழைந்து பாக்கு மரங்களை உண்டதையடுத்து, வனத்துறையினர் யானைய தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதஙகளாகவே ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. நீண்ட தந்தங்கள், மிகப்பெரிய உருவமாக காணப்பட்ட அந்த யானையை உள்ளூர் மக்கள் பாகுபலி என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
காட்டுயானை பாகுபலி இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததையடுத்து, அந்த யானையைப் பிடித்து சென்று அடர் வனத்தில் விட விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அந்த யானைக்கு திடீரென வாயில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இந்த யானையை வன கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்து யானையைப் பிடித்து செல்ல முயன்ற நிலையில் யானை அகப்படவில்லை. மேலும் யானைக்கு தானகவே காயம் சரியாகி வருவதாக கூறிய வன கால்நடை மருத்துவர்கள், இந்த யானையை பிடிக்க வேண்டாம் என அறிக்கை அளித்தனர். அதே சமயத்தில் அந்த சம்பவத்திற்கு பிறகு காட்டுயானை பாகுபலி தனது வழக்கமான வலசை பாதையில் இருந்து விலகி அடர் வனத்திற்குள்ளும் சென்றது.
இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில், இதுவரை விவசாய தோட்டங்களுக்கு வராமல் இருந்த யானை பாகுபலி தற்போது மீண்டும் நுழைய ஆரம்பித்துள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று அதிகாலை கல்லார் பகுதியில் உள்ள பாக்கு தோப்பில் நுழைந்த காட்டுயானை பாக்கு மரங்களை உடைத்து உண்டுள்ளது.
இதனை கண்ட விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பின்னர் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் யானையை விரட்டியுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின் பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் இருப்பதை உறுதி செய்துள்ள வனத்துறையினர், அந்த யானையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சௌம்யா.மோ






