முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை மழையானது அவ்வப்போது பெய்து வரும் நிலையில், முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டு யானைகள் இடம் பெயர்ந்து செல்கின்றன. இதனால் சாலையோரங்களில் உலா வருவதும் சாலையை கடந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனிடையே முதுமலை மசினகுடி வனப்பாதையில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சாலையை கடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுபோன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வரும் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகளை அவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கண்டு ரசித்து செல்ல வேண்டும். சாலையில் உலா வரும் வனவிலங்குகளை புகைப்படங்கள் எடுத்து தொந்தரவு செய்வது மற்றும் கூச்சலிடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என வனத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.







