கூலிப்படையை ஏவி காதல் கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை
சேர்ந்த அழகு சுந்தரபாண்டி (32) என்பவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாயப்
பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவரும் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த புனித ஆனின
எப்சிபா(29) என்பவரும் காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து
கொண்டனர்.
இந்த தம்பதி தற்போது 2 பெண் குழந்தைகளுடன் சின்னவநாயக்கன்பட்டி
கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அழகு சுந்தரபாண்டி ஜீன் 8-ம் தேதி
இரவு 7 மணியளவில் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு
சென்று கொண்டிருந்த போது சங்கரலிங்கபுரம் விலக்கில் இருந்து அவரது கிராமத்தைச்
சேர்ந்த மாரிராஜ் என்பவர் அழகு சுந்தரபாண்டியிடம் பேசிக்கொண்டே வந்துள்ளார்.
அப்போது திடீரென மாரிராஜ் நின்று விட, சல்லிசெட்டிபட்டி கிராமம் அருகில்,
அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அழகு சுந்தரபாண்டியை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கொண்டு வந்த அரிவாளை பைக்கில் சென்று கொண்டிருந்த அழகு சுந்தரபாண்டியின் மீது வீசியுள்ளனர்.
ஆனால் அரிவாள் கீழே விழுந்ததில், தன்னை கொல்ல முயன்றதை அறிந்து அழகு சுந்தரபாண்டி வேகமாக பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போதும்
அந்த மர்ம நபர்கள் விடாமல் கீழே விழுந்த அரிவாளை எடுத்துக்கொண்டு துரத்திச்
சென்று அழகு சுந்தரபாண்டியை வெட்டியுள்ளனர். இதில் நெஞ்சுப் பகுதியில் லேசான
வெட்டுக்காயத்துடன் பைக்கை திருப்பிக் கொண்டு அருகே இருந்த பெட்டிக்கடைக்குச்
சென்றுள்ளார். பொதுமக்கள் சிலர் கூடியதால் கொலை செய்யும் நோக்கில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தோடு, காயமடைந்த அழகு சுந்தரபாண்டியை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட
விசாரணையில் அழகு சுந்தர பாண்டிக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் காத்திருந்தது.
இச்சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அழகு சுந்தரபாண்டியுடன்
பேசிக்கொண்டே வந்து திடீரென மாயமான கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாரிராஜ்-க்கும்,
அழகு சுந்தரபாண்டியின் மனைவி புனித ஆனி எப்சிபா-விற்கும் நீண்ட நாட்களாக
தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் தன்னுடைய கணவனை தீர்த்துக்கட்ட
முடிவு செய்த புனித ஆனி எப்சிபா, அவரின் மாரிராஜ்(31) மற்றும்
அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(20) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு அழகு
சுந்தரபாண்டியை கொலை செய்வதற்காக மதுரையிலிருந்து கூலிப்படையினரை வரவழைத்தது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொடுத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அழகு சுந்தரபாண்டியின் மனைவி புனித ஆனி எப்சிபா உட்பட 3 பேரையும் கைது செய்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புனித ஆனி எப்சிபா-வை பாளையங்கோட்டை கொக்கிரக்குளம் சிறையிலும், மாரிராஜ் மற்றும் சரவணனை கோவில்பட்டி கிளைச்சிறையிலும் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.








