கோவையில் உறவினருடன் செல்ஃபி எடுத்த மனைவியைக் கொல்ல முயன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை இடையர்பாளையத்தை அடுத்த டி.வி.எஸ். நகர் பகுதியில் வசித்து வருபவர்கள்
எட்வர்ட் ஜான் – கிரேஸ் பியூலா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கிரேஸ் பியூலா சித்ரா அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மதுவிற்கு அடிமையான எட்வர்ட் ஜான், அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி கிரேஸ் பியூலாவின் சகோதரியின் திருமணம் கோவை
சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட கிரேஸ் பியூலா, திருமண நிகழ்ச்சியில் உறவினர் ஒருவருடன் செல்ஃபி
எடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட் ஜான் வீடு திரும்பியதும்
மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் மீண்டும் திருமணத்திற்குச் சென்று மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான் செல்ஃபி எடுத்தது குறித்து மனைவியிடம் மீண்டும் கேட்டு தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். மேலும், கிரேஸ் பியூலாவின் கழுத்தை நெரித்ததில் மயங்கி விழந்துள்ளார்.
உடனடியாக கிரேஸ் பியூலாவின் தாய் தமிழ்ச்செல்விக்கு எட்வர்ட் போன் செய்துள்ளார். பியூலாவின் வீட்டுக்கு விரைந்து சென்ற உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து துடியலூர் போலீஸில் புகார் அளித்ததன்பேரில் , வழக்குப் பதிவு செய்த போலீஸார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.








