கொலை செய்ய முயன்ற கணவர்: வெட்டிக் கொன்ற மனைவி

மதுபோதையில் தன்னையும், தன் மகளையும் வெட்டியதையடுத்து, கத்தியைப் பிடுங்கி மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்தார். வேலூர், வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (60). லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். குமரவேலுவுக்கு…

மதுபோதையில் தன்னையும், தன் மகளையும் வெட்டியதையடுத்து, கத்தியைப் பிடுங்கி மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்தார்.

வேலூர், வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (60). லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். குமரவேலுவுக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி கணவர் பாலாஜியுடன் தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் வசித்து வருகிறார். இளைய மகள் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு படிக்கிறார்.

இந்நிலையில், குமரவேல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கத்தியை எடுத்து மனைவியை அடிக்கடி கொல்லவும் முயற்சி செய்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பே குமரவேலுவின் குடும்பப் பிரச்னை காவல் நிலையம் வரை சென்றது. அவரின் மனைவி கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் குமரவேலுவை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். ஆனாலும், அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று காலையில் இருந்தே மது போதையில் இருந்த குமரவேல் மனைவியிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குமரவேலுவின் தம்பி வீட்டுக்கு வந்து அவரைக் கண்டித்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் குமரவேல் மனைவியைக் கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது, தடுக்க வந்த இளைய மகளின் 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. அதேபோல, கோமதியின் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கணவனிடமிருந்த கத்தியைப் பிடுங்கிய கோமதி அவரைத் திருப்பி தாக்கியதில் குமரவேலுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று குமரவேலுவின் உடலை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

காயமடைந்த கோமதியும், அவரின் மகளும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.