தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நெஞ்சுவலியால் உயிரிழந்துவிட்டார் என நாடகமாடியதாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ரஞ்சித் குமார் சிங் – சத்யா தம்பதி. இவர்கள் தனது இரண்டு வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு ரஞ்சித்குமார் சிங் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக மனைவி சத்யா கூறியுள்ளார். இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு வந்து சடலத்தை பார்த்த ரஞ்சித்குமார் சிங்கின் தந்தை, இறப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான், ரஞ்சித்குமார் சிங் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மனைவி சத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரஞ்சித்குமார் சிங் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஆத்திரமடைந்த சத்யா, பல முறை கண்டித்திருப்பதும், சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரை கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நெஞ்சுவலியால் தன் கணவர் இறந்துவிட்டதாக கூறி அனைவரிடமும் நாடகமாடியதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து சத்யாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்