அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரை ஆசிரியராக இந்திய வம்சாவளி நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவியேற்றார். அவரது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு உயர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிலும், ஜோ பைடனின் உரை ஆசிரியராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வினய் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தெலங்கானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இந்நிலையில் அமெரிக்காவில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவருக்கு உயர் பதவி கிடைத்துள்ளதை அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர். வினய் ரெட்டியின் தந்தை மருத்துவம் படித்துள்ளார். மருத்துவம் படித்த அவர் அதன்பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். இதற்கு முன்னதாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் உரை ஆசிரியராக வினய் ரெட்டி இருந்துள்ளார். அதேபோல் பிரச்சார நேரத்தில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு உதவி செய்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தங்கள் பூர்வீகத்தை மறக்காமல், கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை வினய் ரெட்டியின் குடும்பத்தினர் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.







