உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சுருக்கு மடி வலையை எடுத்து செல்ல அனுமதிக்காதது ஏன்? – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

மீன் பிடிப்பதற்காக சுருக்குமடி வலையை எடுத்து செல்ல அனுமதிக்காதது ஏன் என தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுருக்குமடி வலை வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே சுருக்குமடி வலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் பயன்படுத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மீனவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜெய்சுகின்:

உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் சுருக்கு மடி வலையை எடுத்து செல்ல தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. சுருக்கு மடி வலையை 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள மத்திய அரசின் கடற்பரப்புக்கு மீன் பிடிக்க எடுத்து செல்ல மீனவர்களை அனுமதிக்கவில்லை.

எனவே இந்த விவகாரத்தில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அந்த மனுவை ஏற்று தமிழக அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீதிபதிகள்:

மீன்பிடி தடைக்காலம் இல்லாத நிலையிலும் சுருக்குமடி விலையை எடுத்துச் செல்ல அனுமதிக்காதது ஏன்?
எங்கள் உத்தரவுக்கு பின்னரும் தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் முழுமையாக சுருக்கு மடி வலைகளை தடை செய்வதை ஏற்க முடியாது.

இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துள்ளோம், இந்த செயல்பாடு சரியானது அல்ல.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சுருக்கு மடி வலையை எடுத்து செல்ல அனுமதிக்காதது ஏன் ? தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.