தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பதுக்கலைத் தடுக்கும் நோக்கில், நெல், அரிசி, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை இருப்பு வைப்பதற்கான அதிகபட்ச வரம்புகளை அரசு நிர்ணயித்துள்ளது. மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், அரிசி ஆலைகள், இறக்குமதியாளர்கள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் தனித்தனியாக இருப்பு வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
ஜனவரி 31, 2027 வரை அமலில் இருக்கும் கட்டுப்பாடு!
தமிழகத்தில் நெல் மற்றும் அரிசிக்கான இருப்பு வரம்புகளை நிர்ணயித்து, தமிழ்நாடு நெல்/அரிசி (இருப்பு வரம்பு) கட்டுப்பாட்டு ஆணை, 2026-ஐ தமிழக அரசு நேற்று (நவம்பர் 13) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் 2027 ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இதன்படி, மொத்த விற்பனையாளர்கள் அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் நெல் அல்லது அரிசியை இருப்பு வைத்திருக்கலாம். சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் அதிகபட்சம் 8 மெட்ரிக் டன் இருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய வணிகச் சங்கிலி சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் 8 மெட்ரிக் டன் இருப்பு வைத்திருக்கலாம். அதேசமயம், அவர்களின் மொத்த இருப்பு வரம்பு, மொத்த விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 8 மடங்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரிசி ஆலைகள், இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்பாடு!
அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு நிகரான அளவை மட்டுமே இருப்பு வைத்திருக்க முடியும். இறக்குமதியாளர்கள், சுங்க அனுமதி கிடைத்த நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்ட நெல் அல்லது அரிசியை இருப்பு வைத்திருக்கக் கூடாது. செயலாக்க நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றின் மாதாந்திர நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 60 சதவீதத்தை, 2027 ஜனவரி வரை எஞ்சியுள்ள மாதங்களின் எண்ணிக்கையால் பெருக்கி கணக்கிடப்படும் அளவு இருப்பு வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு, உளுந்துக்கும் இருப்பு வரம்பு!
துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றின் சேமிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு துவரம் பருப்பு மற்றும் உளுந்து (சேமிப்புக் கட்டுப்பாடு) ஆணை, 2026 என்ற தனி அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 13ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
இதன்படி, ஒவ்வொரு வகை பருப்புக்கும் மொத்த விற்பனையாளர்கள் அதிகபட்சமாக 200 மெட்ரிக் டன் இருப்பு வைத்திருக்கலாம். சில்லறை விற்பனையாளர்கள் அதிகபட்சம் 5 மெட்ரிக் டன் இருப்பு வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய வணிகச் சங்கிலி சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் 5 மெட்ரிக் டன்னும், ஒவ்வொரு கிடங்கிலும் 200 மெட்ரிக் டன்னும் இருப்பு வைத்திருக்கலாம்.
நவம்பர் 16ஆம் தேதிக்குள் இருப்பைக் குறைக்க உத்தரவு!
ஆலை உரிமையாளர்களைப் பொறுத்தவரை, கடந்த மூன்று மாதங்களின் உற்பத்தி அளவு அல்லது ஆண்டுக்கான நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 25 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ அந்த அளவு இருப்பு வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள், சுங்க அனுமதி கிடைத்த நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் துவரம் பருப்பு மற்றும் உளுந்தை இருப்பு வைத்திருக்கக் கூடாது.
ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பு வைத்திருக்கும் நிறுவனங்கள், நவம்பர் 16ஆம் தேதிக்குள் அவற்றை அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் குறைக்க வேண்டும். மேலும், தங்களிடம் உள்ள இருப்பு விவரங்களை அறிவிப்பதுடன், நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இணையதளத்திலும் அவற்றைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
1955ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் இந்த இரண்டு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இரு உத்தரவுகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.




