அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ 20,000 கோடி முதலீட்டிலான பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலே கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். ஆட்டோ மொபைல் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது எனக் கூறிய அவர், தற்போது மின்வாகன உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது என குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள் : ’இராவணக் கோட்டம்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் – நாடார் சங்கங்கள் கோரிக்கை
மேலும், தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க துணை புரிந்தார் எனக் கூறினார். தற்போது தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக செயல்படுவார் என கூறிய அவர், நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டதாக விளக்கமளித்தார். தொழிற்சாலைகளுக்கும் தொழில்துறைக்கும் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.







