சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் – வெளியான 6 நாட்களில் ரூ.68 கோடி வசூல்

பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. படம் வெளியாகி 6 நாட்களில் ரூ.68 கோடி வசூலித்துள்ளது. இயக்குனர் சுதிப்டோ…

பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. படம் வெளியாகி 6 நாட்களில் ரூ.68 கோடி வசூலித்துள்ளது.

இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இந்த நிலையில், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்க சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியிருந்தார்.

இதுதவிர இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து படம் திரையிடப்பட்ட முதல் நாள் அன்றே படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி திரையிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான மே 5 ஆம் தேதி வெளியான”தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. படம் வெளியானதில் இருந்து இதுவரை உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ₹68.86 கோடி வசூலித்துள்ளது.

வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பி-அத்தீவில் இப்படம் செய்துள்ள வசூல் சாதனை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘The Kerala Story’ படத்தை தோற்கடிக்க முடியாது மற்றும் அதன் ஓட்டத்தை தடுக்க முடியாதது. அது வார நாட்களில் கனவு ஓட்டத்தைத் தொடர்கிறது. வெள்ளிகிழமை 8.03 கோடி வசூல் ஆன நிலையில், சனிகிழமை 11.22 கோடி, ஞாயிற்றுக்கிழமை16.40 கோடி, திங்கள்கிழமை 10.07 கோடி, செவ்வாய்க்கிழம 11.12 கோடி என தொடர்ந்து புதன்கிழமையான் நேற்று வரை ₹ 68.86 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/taran_adarsh/status/1656509438818422784?s=20

மேலும் திங்கட்கிழமை அன்று சரிவு ஏற்பட்டாலும், வார இறுதி நாட்களில் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் படம் சமூக ஊடகங்களிலும், செய்திகளிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த ஏற்றம் தொடர்ந்தால், வார இறுதியில் ₹100 கோடியை எட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியாகிறது.. இது அதன் ஒட்டுமொத்த வசூலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் நாயகி அடா ஷர்மா, “எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும், என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நாளை ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது” மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் விபுல் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், படம் பெற்ற பின்னடைவுக்கு பதிலளித்து பேசியிருந்தார். அப்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம், முஸ்லிம்கள் அதாவது இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல, மாறாக பயங்கரவாதத்திற்கு எதிரானது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.