அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழுக்கென தனியாக அலுவலகம் அமைக்காதது ஏன் என மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். அப்போது, இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த நீதிபதிகளின் கேள்விக்கு பதில் அளித்த அவர்கள், இதுவரை மொத்தமாக 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டிருப்பதாக கூறினர். அவற்றில் 27 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள், 25 ஆயிரத்து 756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை 9 ஆயிரத்து 400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது என அப்போது கூறிய நீதிபதிகள், அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது.
லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது.
அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே அடையாளப்படுத்தப்பட வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டியவை. மொழிகளுக்கிடையே வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க இயலாது எனக் கூறிய நீதிபதிகள், மொழி வாரியாக கல்வெட்டுக்களின் எண்ணிக்கை, நிபுணர்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்களின் விபரங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்தனர்.








