கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் உட்பட பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்
சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்து. இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஹோட்டலில் உள்ள இலவச வைஃபை வதியை பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை கண்டறிந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் மூலமாக மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதேபோல் கேரள முதலமைச்சர், கேரள தலைமைச் செயலகம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பயன்படுத்திய செல்போனின் உரிமையாளரை கண்டறிந்த போலீசார், கிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவரது செல்போன் திருடு போனதாக தெரியவந்ததையடுத்து, செல்போனை திருடி சென்ற நபர்தான், இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக உறுதி செய்தனர். இதனையடுத்து சேலம் மாநகர போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கேரளாவை சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.








