This News Fact Checked by ‘Fact Crescendo Malayalam‘
கோழிக்கோடு ரயில் நிலையத்தில் உள்ள கடையின் பலகையில் பிரதமரின் புகைப்படம் காகிதத்தால் மூடப்பட்டது சர்ச்சையான நிலையில், அது தேர்தல் நடத்தை விதியின் ஒரு நடைமுறையே என்பது தெரியவந்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் உள்ள கடையின் முன் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் படம், மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு பதிவு புகைப்படத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.
போலி பிரசாரம்:
ரயில்வே பிளாட்பார்மில் உள்ள கடையின் முன் பலகையில் வைக்கப்பட்டிருந்த பிரதமரின் படம் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படவில்லை. கேரளாவில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் எண். 4-ல் தான் இந்த நிலை.
இந்திய பிரதமரின் படத்திற்கே இங்கு அனுமதி இல்லை!!.. பிரதமர் மோடி படத்தை கடைக்காரர் காகிதத்தை ஒட்டி மறைத்துள்ளார். 👆👆தயவு செய்து இந்த செய்தி சம்பந்தப்பட்ட ரயில்வே அமைச்சகத்திற்கு வரும் வரை பரப்பவும்.
இவ்வாறு ஒரு பதிவு ஃபேஸ்புக் சமூக வலைதள பக்கத்தில் பரவியது.
ஆனால் விசாரணையில் இது தவறான விளம்பரம் என்பது தெரியவந்தது.
இதுதான் உண்மை:
மேற்குறிப்பிட்ட பதிவின் உண்மை தன்மை பற்றி அறிய கோழிக்கோடு ரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, பிரதமர் படத்தை மறைத்ததற்கான காரணம் தேர்தல் விதிகளின் ஒரு பகுதியாகும் என்றும், இது அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருந்தும் என்றும் ஸ்டேஷன் மாஸ்டர் பதிலளித்தார்.
பின்னர் மாநில தேர்தல் ஆணைய தலைமையகத்தை தொடர்பு கொண்டோம்.
அப்போது தேர்தல் ஆணைய அதிகாரி அளித்த விளக்கமாவது:
“பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்தபோது, அனைத்து அரசு அமைப்புகளிலிருந்தும் மோடியின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. கோவிட் தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் படம் ஏற்கனவே நீக்கப்பட்டது . இதே போன்று நடத்தை விதிகளின் ஒரு பகுதியாகவே, ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்தும் பிரதமரின் படம் நீக்கப்பட்டது.” இவ்வாறு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
முடிவுரை
தேர்தல் நடத்தை விதிகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து கடைகளிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் மறைக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மட்டும் இந்தியப் பிரதமரின் படம் தனிப்பட்ட முறையில் மறைக்கப்படவில்லை.
Note : This story was originally published by ‘Fact Crescendo Malayalam‘ and translated by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.







