அடுத்து வரும் நொடி ஒளித்துவைத்திருக்கும் அபாயங்கள் எத்தனையோ என்பதற்கு மிகச்சரியான உதாரணம் பூகம்பம். இந்த நொடிக்கும் அடுத்த நொடிக்கும் இடையே ஒரு பிரளயத்தை, பேரழிவை ஏற்படுத்தும் இந்த பூகம்பம், மனித உயிர்களின் கனவுகளையும், நனவுகளையும் தவிடுபொடியாக்கிவிடும். புயல், மழை, போன்ற இயற்கை சீற்றங்களையாவது ஓரளவு முன்கூட்டியே உணர்ந்து சுதாரித்துக்கொள்ளலாம். ஆனால் சுதாரிப்பதற்கு ஒருசில விநாடிகள்கூட இடம்கொடுக்காமல் உயிரினங்களை உருக்குலைக்கும் நிலநடுக்கம், இயற்கை சீற்றங்களின் கோரமுகங்களில் மிகவும் கொடூரமானது.
கடந்த பிப்ரவரி 6ந்தேதி துருக்கியிலும், சிரியாவிலும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. சரிந்துவிழுந்த கட்டடங்களோடு சேர்த்து மக்களின் வாழ்வாதாரமும் தரைமட்டமாகியுள்ளது. நிலநடுக்கம் கடுமையாக தாக்கிய இடங்களில் உயிர் பிழைத்தவர்கள் தங்களின் வாழ்க்கையை மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி மனித குலத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலநடுக்கம் எப்படி உருவாகிறது?
நாம் வாழும் இந்த பூமி பந்து ஒன்றின் மேல் ஒன்று போர்த்தியது போல் 4 முக்கிய பகுதிகளை கொண்டது. இன்னர் கோர், அவுட்டர் கோர், மேன்டில், கிரஸ்ட் என்கிற அந்த 4 முக்கிய பகுதிகளில் கிரஸ்ட் எனப்படும் பூமியின் மேற்பரப்பில்தான் நாம் வாழ்கிறோம். வீடுகட்டி முடித்தவுடன் தரையில் இறுதியாக நாம் டைல்ஸ் பதிப்போம். மனிதர்கள் பூமியில் வாழ்வதற்காக இயற்கையாக போட்டுக்கொடுத்த டைல்ஸ்தான் இந்த கிரஸ்ட். பூமியின் மொத்த விட்டத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவான அளவுதான் இந்த கிரஸ்ட்டின் திண்ணம். அந்த திண்ணமே 30 லிருந்து 100 கி.மீ வரை ஆழம் கொண்டதாக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் பூகோள உருண்டையின் மொத்த அளவு எவ்வளவு பெரியதாக இருக்கும் என கற்பனை செய்துகொள்ளுங்கள்.
கண்டத்தட்டுக்கள்
பூமியின் மேற்பரப்பான கிரஸ்ட்டை பூமிப்பந்தோடு ஒட்டி வைத்திருக்கும் அமைப்புதான் லித்தோஸ்பியர், பூமியின் மேல் பரப்பான கிரஸ்ட்டும் அதன் கீழேயிருக்கும் அடுக்கான மேன்டிலின் மேல் பகுதியும் சேர்ந்ததுதான் லித்தோஸ்பியர். தளம் பதிக்கும்போது சில வீடுகளில் ஒழுங்கில்லாத வெவ்வேறு அளவிலான, சிக்சாக் போன்ற டைல்ஸ்கள் அல்லது ஓடுகளைக் இணைத்து தளம் பதிப்பார்கள். அது ஒரு டிசைனாகக் கருதப்படும். அப்படி யொரு டிசைன்தான் பூமியின் மேற்பரப்பில் பூசப்பப்பட்டுள்ளது. வெவ்வேறு அளவிலான டைல்ஸ்களை இணைத்து வீட்டிற்கு தளம் அமைப்பது போல வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவிலான கண்டத்தட்டுக்களை இணைத்து பூமியின் மேற்பரப்பை இயற்கை கட்டமைத்துள்ளது.
டெக்டோனிக் பிளேட்ஸ் என அழைக்கப்படும் இந்த கண்டத் தட்டுகள், அதன் அளவைப் பொறுத்து மேஜர் டெக்டோனிக் பிளேட்டுகள், மைனர் டெக்டோனிக் பிளேட்டுக்கள், மைக்ரோ டெக்டோனிக் பிளேட்டுகள் என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
மேஜர் டெக்டோனிக் பிளேட்டுகள்
1.ஆப்ரிக்க கண்டத்தட்டு
2. அண்டார்க்ட்டிக் கண்டத் தட்டு
3. யூரேஷியா கண்டத்தட்டு
4.இண்டோ- ஆஸ்திரேலியன் கண்டத்தட்டு
5. வடஅமெரிக்கன் கண்டத்தட்டு
6.பசுபிக் கண்டத்தட்டு
7.தென் அமெரிக்கன் கண்டத்தட்டு
என 7 பெரிய கண்டத்தட்டுக்கள் புவியில் உள்ளன.
1.அமுரியன் கண்டத்தட்டு
2.அரேபியன் கண்டத்தட்டு
3. பர்மா கண்டத்தட்டு
4.கரீபியன் கண்டத்தட்டு
5. கரோலைன் கண்டத்தட்டு
6. கோகோஸ் கண்டத்தட்டு
7. இந்தியன் கண்டத்தட்டு
9. நியூஹெப்ரிட்ஸ் கண்டத்தட்டு
10. ஓகோட்ஸ்க் கண்டத்தட்டு
11. பிளைப்பைன் சீ கண்டத்தட்டு
12. ஸ்காடியா கண்டத்தட்டு
13. சோமாலி கண்டத்தட்டு
14. சுண்டா கண்டத்தட்டு
15. யாங்க்ட்ஸ் கண்டத்தட்டு
என 15 சிறிய கண்டத்தட்டுக்கள் புவியில் உள்ளன. இவை தவிர 64 குறு டெக்டோனிக் பிளேட்டுக்கள் பூமி பந்தின் மேற்பரப்பில் காணப்படுகிறது. இந்த கண்டத்தட்டுக்கள் நகரும் தன்மை கொண்டவை. ஆண்டுக்கு 2 முதல் 15 செ.மீ வரையே நகர்ச்சி இருக்கும் அளவிற்கு மிகவும் மெதுவாக நகர்வதால் அதனை நாம் உணர முடியாது.
கண்டத்தட்டுகள் நகர்வது ஏன்?
640 கோடி வருடங்களுக்கு முன்பு உண்டான பூமியின் மையக் கரு இன்னும் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான அழத்தில் உட்கரு உள்ளதால் அந்த வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இதமான குளிரை அனுபவவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பூமியின் உட்கருவின் மேற்பரப்பில் மட்டும் வெப்பம் எவ்வளவு தெரியுமா?. 5ஆயிரத்து 430 டிகிரி செல்சியஸ். 100 டிகிரிக்கே தண்ணீர் கொதித்துவிடும்.
அடுப்பில் வைக்கப்படும் பால் முதலில் அமைதியாக இருக்கும் பின்னர் வெப்பம் ஏறியதும் கொதிக்கத் தொடங்கும். அதாவது அதில் சலனங்கள் ஏற்படும். அப்படித்தான் பூமியின் உட்கருவில் காணப்படும் வெப்பம் வெளிக்கரு, மேன்டில் எனக்கடத்தப்பட்டு புவியின் மேற்பரப்பை வந்தடையும்போது அந்த வெப்ப ஆற்றல் கண்டத்தட்டுக்களில் சலனத்தை ஏற்படுத்தி அவற்றை நகர வைக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?
கண்டத்தட்டுக்கள் நகரும்போது இரண்டு கண்டத் தட்டுகளின் எல்லை பகுதிகள் ஒன்றோடு ஒன்று உராய்கின்றன. அப்படி உராயும்போது அந்த உராய்வு விசை கண்டத் தட்டுக்களின் நகர்வில் தடையை ஏற்படுத்துகிறது. இப்படி நீண்ட நாட்கள் சிக்கி நிற்கும்போது உராய்வு விசை மீது நகர்வு விசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டேயிருந்து ஒரு நாள் அந்த அழுத்தம் உராய்வு விசையை மீறிச் சென்று கண்டத்தட்டுக்களின் நகர்வை சரியாக்கும். அப்போது வெளிப்படும் அந்த அழுத்தம் செஸ்மிக் அதிர்வலைகளாக புவியின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கும். அந்த அதிர்வலைகள் பூமியின் மேற்பரப்பை ஆட்டம் காண வைப்பதைத்தான் நாம் நிலநடுக்கமாக உணர்கிறோம் என புவியியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே இரண்டு கண்டத்தட்டுக்கள் சந்திக்கும் எல்லை பகுதிகளில் உள்ள இடங்களிலேயே நிலநடுக்கம் அதிக அளவில் ஏற்படுகிறது.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது ஏன்?
உலகில் நிலநடுக்க ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் துருக்கி முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு மட்டுமே 33,000 முறை சிறுசிறு நில அதிர்வுகள் அ்ங்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை மக்கள் உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை. 33,000 நில அதிர்வுகளில் 332 நில அதிர்வுகள் 4 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகியுள்ளன. துருக்கியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதற்கு அதன் புவியியல் அமைப்பே முக்கிய காரணம். கண்டத்தட்டுகள் அடிப்படையில் பார்க்கும் போது துருக்கி அனடோலியன் கண்டத் தட்டின் மீது அமைந்துள்ளது. அந்த கண்டத்தட்டு பெரிது சிறிது என 4 கண்டத்தட்டுகளுடன் எல்லைகளை பகிர்ந்துகொண்டுள்ளது. ரஷ்யன் கண்டத்தட்டு, அரேபியன் கண்டத் தட்டு, ஆப்ரிக்கன் கண்டத்தட்டு, ஏஜியான் கண்டத்தட்டு என 4 கண்டத்தட்டுகளுடன் எல்லைகளை பகிர்ந்துகொண்டுள்ள அனடோலியன் கண்டத்தட்டின் மீது துருக்கி அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. கண்டத்தட்டுகளின் எல்லை பகுதிகளில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படுகிறது என்பதையும், அதன் காரணம் என்ன என்பதையும் மேலேயே விளக்கிவிட்டோம்.
இந்தியாவில் நிலநடுக்க அபாயம் எப்படி?
துருக்கியில் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அந்த பேரழிவு குறித்த செய்திகளுக்கு இணையாக நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானி ஒருவரின் டிவிட்டும் இணையத்தில் வைரலானது. முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாத இயற்கை சீற்றமாக நிலநடுக்கம் கருதப்படும் நிலையில் அந்த டிவிட்டர் தகவல் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிரான்க் ஹூக்கர்பீட்ஸ் என்கிற அந்த விஞ்ஞானி துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு டிவிட்டர் பதிவு ஒன்றை போட்டிருந்தார். தெற்குமத்திய துருக்கி, ஜோர்டன், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் விரைவிலோ அல்லது தாமதமாகவோ 7.5 ரிக்டர் அலகுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என பிரான்க் ஹூக்கர்பீட்ஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருந்தார். அவர் கணித்தது போலவே டிவிட்டர் பதிவு வெளியான மூன்று நாட்களில் துருக்கியில் 7.8 ரிக்டர் அலகுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை இப்படி துல்லியமாக கணித்த விஞ்ஞானி பிரான்க் ஹூக்கர்பீட்ஸ் தற்போது உலகெங்கிலும் பிரபலமாகியிருக்கிறார். ஆனால் இது காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதையாக நடந்த கணிப்பு என்கிற விமர்சனமும் ஒரு புறம் முன்வைக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
விஞ்ஞானிகள் பலர் இவ்வாறு நிலநடுக்கத்தை துல்லியமாக கணிப்பது சாத்தியமற்றது என கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக உலகின் முன்னணி புவியியல் ஆராய்ச்சி மையமான அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம், நிலநடுக்கத்தை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க சாத்தியமில்லை என்றே கூறுகிறது. நிலநடுக்கம் ஏற்படும் இடம், காலம், நிலநடுக்கத்தின் அளவு ஆகியவற்றை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது என்கிறார் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையத்தின் உதவி ஒருங்கிணைப்பாளராக உள்ள வில்லியம் பார்ன்ஹார்ட். ஆனாலும் பிரான்க் ஹூக்கர்பீட்ஸ் ஏற்படுத்தும் பரபரப்புகள் குறையவில்லை. துருக்கியை அடுத்து ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் விரைவிலோ அல்லது காலதாமதமாகவோ ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு ஏற்படும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள் பாகிஸ்தான், இந்தியா வழியாக கடந்து இந்தியப் பெருங்கடலில் நிறைவடையும் என அவர் கூறியுள்ளது இந்த மூன்று நாடுகளிலும் பீதியை கிளப்பியுள்ளது. எனினும் இதனை பாகிஸ்தான் புவியியல் ஆய்வு மையம் மறுத்துள்ளது. துருக்கியின் புவியியல் அமைப்பும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் புவியியல் அமைப்பும் வேறுவிதமானது என பாகிஸ்தான் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த கணிப்புகள், கருத்துக்கள் ஒருபுறம் இருக்க. இந்தியாவின் புவியியல் அமைப்பு மற்றும் பூகம்ப பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றி பார்ப்போம்.
இந்தியா இந்தியன் டெக்டோனிக் பிளேட்டில் அமைந்துள்ளது. கிட்டதட்ட இந்தியா மட்டுமே இந்த கண்டத்தட்டில் முழுமையாக அமைந்துள்ளது. அதனாலேயே இந்தியாவிற்கு துணைக்கண்டம் என்கிற பெயரும் உண்டு. இந்தியன் கண்டத்தட்டின் எல்லைகள் யூரேஷியன் கண்டத்தட்டு, ஆஸ்திரேலியன் கண்டத் தட்டு, அரேபியன் கண்டத்தட்டு, ஆப்ரிக்கன் கண்டத்தட்டு என 4 கண்டத்தட்டுகளுடன் எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இவற்றில் மூன்று கண்டத்தட்டுகளின் எல்லைகள் இந்தியக் கண்டத்தட்டுடன் இணையும் பகுதி கடலுக்கு அடியிலேயே உள்ளது. இந்திய கண்டத்தட்டும் யூரேஷிய கண்டத்தட்டும் சந்திக்கும் பகுதிதான் நிலப்பரப்பில் உள்ளது. அந்த பகுதி இமயமலை பகுதியாகும். அங்கு இந்திய கண்டத்தட்டு யூரேஷிய கண்டத்தட்டை நோக்கி நகரும்போது இரு கண்டத்தட்டுக்களின் எல்லைகள் உராய்ந்து நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்தியாவில் இமயமலை அமைந்துள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்டவை நிலநடுக்கம் வர அதிகம் வாய்ப்பு உள்ள பகுதிகளாக கருதப்படுகிறது.
தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் 59 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. நிலநடுக்க ஆபத்து வீரியத்தின் அடிப்படையில் 5 மண்டலங்களாக இந்த பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எந்த அளவிற்கு ஆபத்து உள்ளது என்கிற அடிப்படையில் அந்த வகைப்படுத்தல் அமைந்துள்ளது. இதில் 5வது மண்டலம் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக கருதப்படுகிறது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 11 சதவீதம் இந்த பகுதியில் அடங்கும். வடகிழக்கு மாநிலங்கள், ஜம்முகாஷ்மீர் , இமாச்சல் பிரதேசத்தின் ஒரு பகுதி, உத்ராஞ்சல், குஜராத்தின் குட்ஜ் பகுதி, வடக்கு பீகாரின் சில பகுதிகள், அந்தமான் நிகோபார் தீவு உள்ளிட்டவை இதில் அடங்கும். 5வது மண்டலத்தில் இடம்பெறாத ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசத்தின் பகுதிகள், டெல்லி, சிக்கிம், உத்தரபிரதேசத்தின் வடக்கு பகுதி, பீகார், மேற்கு வங்கம், குஜராத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிராவின் மேற்கு கடற்பகுதியை ஒட்டிய சிறிய பகுதி, மேற்கு ராஜஸ்தானின் சிறிய பகுதி, பஞ்சாபின் சில பகுதிகள் உள்ளிட்டவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ள 4வது மண்டலத்தில் அடங்கியுள்ளன. மொத்தம் 18 சதவீத நிலப்பரப்பு பகுதி 4ல் வருகிறது.
மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள மண்டலம் 3ல் 30 சதவீத நிலப்பரப்பு அமைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கோவா, ஆந்திரா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், பஞ்சாபின் எஞ்சியுள்ள பகுதிகள், கர்நாடகா, மேற்கு ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்டவை அடங்கும். இந்த மூன்று வகைகளிலும் அடங்காத எஞ்சியுள்ள பகுதிகள் சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ள மண்டலம் 2ல் வருகின்றன. அவை நிலநடுக்க ஆபத்து குறைவான பகுதிகளாகும். தமிழ்நாட்டின் பகுதிகள் மிதமான நிலநடுக்க மண்டலம், நில நடுக்க ஆபத்து குறைவான மண்டலம், என இரண்டு மண்டலங்களில் அமைந்துள்ளன.
நிலநடுக்க ஆபத்து அதிகம் உள்ள இந்திய நகரங்கள்
நிலநடுக்கம் ஏற்படும்போது கிராமங்களைவிட அடுக்குமாடி கட்டடங்களை அதிகம் கொண்ட நகரங்களிலேயே பாதிப்புகள் மிகுதியாக உள்ளன. நகரங்களிலேயே உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை நிலநடுக்க பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 5வது மண்டலத்தில் உள்ள பகுதிகளில் எந்தெந்த முக்கிய நகரங்களுக்கு நிலநடுக்க ஆபத்து அதிகம் உள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் வகைப்படுத்தியுள்ளது.
அசாம்- கவுகாத்தி, ஜோர்காத், தேஸ்பூர், சாடியா
மணிப்பூர் – இம்பால்,
ஜம்மு-காஷ்மீர்- ஸ்ரீநகர்
இமாச்சல் பிரதேசம்- மாண்டி
குஜராத்- பூஜ்
பீகார்- தர்பங்கா
நாகலாந்து- கோகிமா
அந்தமான் நிகோபர்- போர்ட் பிளேர்
ஆகியவை நிலநடுக்க பாதிப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படும் மண்டலம் 5ல் உள்ள முக்கிய நகரங்கள். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையோ அல்லது தமிழகத்தில் உள்ள பிற முக்கிய நகரங்களோ மண்டலம் 5 மற்றும் மண்டலம் 4 ஆகிய நில நடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளின் கீழ் வகைப்படுத்தப்படவில்லை.
இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள்
1900ம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது உலகில் கடந்த 123 ஆண்டுகளில் 9 ரிக்டர் அலகுகள் மற்றும் அதற்கும் அதிகமான அளவில் 5 முறை மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 1960ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். 9.5 ரிக்டர் அலகுகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது. வால்டிவியா என்கிற பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் சுமார் 6 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. 1964ம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமும், 2004ம் ஆண்டு இந்தோனோஷியாவின் சுமித்ரா தீவில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கமும் 9.2 ரிக்டர் அலகுகளில் பதிவானது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பேரழிவாக வரலாற்றின் சோகச் சுவடாக அமைந்தது. அப்போது உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2011ம் ஆண்டு ஜப்பானின் டோஹூகு பகுதியை மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 9.1 ரிக்டர் அலகுகளில் பதிவானது. சுமார் 20 ஆயிரம் பேர் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். 1952ம் ஆண்டு ரஷ்யாவின் காம்ஷட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9 ரிக்டர் அலகுகளில் பதிவானது. அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்திலும், சுனாமியிலும் சிக்கி சுமார் 15000 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இதுவரை பதிவானதிலேயே அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது. 8.6 ரிக்டர் அலகுகளில் அந்த நிலநடுக்கம் பதிவானது. அப்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதே நேரம் கடந்த 2005ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 7.6 ரிக்டர் அலகுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது பலி எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அப்போது சுமார் 87 ஆயிரம் பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தனர். கடந்த 2001ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 7.7 ரிக்டர் அலகுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அம்மாவட்டம் உருக்குலைந்தது. சீட்டுக்கட்டுகளாக கட்டடங்கள் சரிந்ததில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது.
இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் அந்த புவியியல் அமைப்புக்கு ஏற்ப கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்கிற கருத்தை விஞ்ஞானிகளும், புவியியல் ஆய்வாளர்களும் முன் வைக்கின்றனர். கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நடைபெறும் வானிலை ஆய்வுகளால் முன்கூட்டியே கணிக்க முடிவதால் அவற்றால் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வருகின்றன. அதே போல் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கணிப்பது சாத்தியமா இல்லையா என்கிற விவாதத்தையெல்லாம் தாண்டி அவற்றை விஞ்ஞானிகள் விரைவில் சாத்தியப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
-எஸ்.இலட்சுமணன்
















