விடிய விடிய நடைபெற்ற ஓசூர் கிராம தேவதைகள் பல்லக்கு திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஓசூரில் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகள் பல்லக்கு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிராம தெய்வங்களை சுமந்து ஊர்வலமாக சென்றது. அப்போது பாரம்பரிய கிராமிய…

ஓசூரில் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகள் பல்லக்கு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிராம தெய்வங்களை சுமந்து ஊர்வலமாக சென்றது.

அப்போது பாரம்பரிய கிராமிய நடனங்கள், காளி ஆட்டம், தெருக்கூத்து, கத்தி போடுதல் மற்றும் கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நகரின் முக்கிய சாலைகளான மகாத்மாகாந்தி சாலை மற்றும் நேதாஜி சாலை ஆகிய இரண்டு சாலைகளிலும் இந்த பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த பல்லக்கு ஊர்வலத்தில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை, காளிகாம்பிகா, விநாயகர், முருகர், கோட்டை மாரியம்மன், சின்ன கோட்டை மாரியம்மன், முத்து மாரியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்லக்குகள் கிராம தெய்வங்களை சுமந்து ஊர்வலமாக சென்றன. இந்த திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில், விடிய விடிய பிரபல இன்னிசை குழுவினர் பக்தி மற்றும் தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளின் திரைப்பட பாடல்கள் பாடி பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

மேலும், தேர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா கோவிலில் பூ கரகம் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர் ஒருவர் தலைமீது பூ கரகத்தை சுமந்தவாறு ஆடிப்பாடி தீ மிதித்து பக்தர்களை உற்சாகப்படுத்தினார். இவரைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்களும் தீ மிதித்து நேர்த்திக் கடனும் செலுத்தினர்.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை பொழுதுகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.