ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? என்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில் நேற்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து முறையாக அனுமதி பெறவில்லை என காவல்துறை தரப்பில், எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடைசெய்து, சாலைகளில் மண் மற்றும் கற்களை குவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பாதிப்படைந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழாவிற்கு அனுமதியளித்தது.
இருந்தும் எருது விடும் விழாவுக்கு அனுமதி அளித்து விழா நடைபெற ஆரம்பித்த நிலையிலும், கோபசந்திரம் பகுதியில் போராட்டகாரர்கள் விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகங்கள் அணிவகுத்து நின்றதோடு, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தை கைவிட காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் மறுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கும் முயற்சியில் இறங்கிய காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். அப்போது அங்கு நின்ற அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சரோஜ்குமார் தாகூர் இளைஞர் ஒருவரை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள அந்த விளக்கத்தில் போலீஸ் ஒருவரை அடித்தாக வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது . நேற்று நடந்த எருது விடும் விழாவில் வெளி மாநிலத்தில் இருந்து அதிக நபர்கள் வந்தார்கள். அவர்கள் உள்ளூர் மக்களிடம் தவறாக நடந்து கொண்டனர். அங்கு செல்லக்கூடிய உள்ளூர் மக்களுக்கு வழி விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி, பொதுமக்கள் மற்றும் பெண் காவலர்களிடம் தவறாக நடந்துகொண்டனர். அந்த
நபர்களை பிடித்து வந்தாலும் மீண்டும் தப்பி ஓடினார்கள். அப்போது அவர்களை அமர சொன்னதற்கு, பதிலுக்கு போலீசாரை தாக்க முயன்றனர். போலீசார் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என அவர்களை அப்புறப்படுத்தினோம் .அந்த நபரின் சரியான முகவரி இதுவரை கிடைக்கவில்லை. முகவரி கிடைத்தபின் கைது செய்யப்படுவர் என தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் எருது விடும் விழா நடத்துவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி கடிதத்தை காவல்துறையிடம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். வீடியோ ஆதாரங்களை கொண்டு உண்மையான குற்றவாளிகளை தேடி வருகின்றோம். இதில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. எந்த வகையிலும் உளவுத்துறை தோல்வி என குறை கூற முடியாது என தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா