ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்கிற விவகாரத்தில் புதிய தீர்வு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவின் முடிவின்படி அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது, தேர்தல் ஆணையம், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தரப்பில் வாதங்களை கேட்ட நீதிபதிகள் இடைக்காலமாக தீர்வு ஒன்றை அளித்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவின் முடிவின்படி தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு இந்த இடைத்தேர்தலுக்காக மட்டுமே என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பொதுக்குழுவின் வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறிய நீதிபதிகள், பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த இடைக்கால ஏற்பாடு என்பது பிரதான வழக்கில் எந்த வகையிலும் மெரிட்டாக கருத முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.