அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது வரும் 24 ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது..
தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் உள்ளன. வாய்ப்பு கிடைத்தால் நாளை பிரதமரை சந்திப்பேன் , நாளை தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் கிடைக்கவில்லை.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் கூறியுள்ள கருத்துக்கள் தொடர்பாக நான்
கருத்து கூற விரும்பவில்லை. அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது சரியான தீர்ப்பை மக்கள் தான் கொடுத்தனர் , மக்களை நம்புகிறோம். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம். கர்நாடகாவில் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவோம்.
அதிமுக விதிகளின்படி 5 ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகப் பொறுப்புக்கு நிர்வாகிகள்
தேர்வு செய்யப்படுவர். பொதுச்செயலாளரை அடிப்படை தொண்டர்களே தேர்வு செய்வர்.
தொண்டர்களுக்கு எம்ஜிஆர் கொடுத்த உச்சபட்ச உரிமை , மரியாதை அது. ஜெயலலிதா இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்த பிறகு அதுகுறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம்.
ஆனால் தற்போது அவர்களாகவே பொதுச்செயலாளரை அறிவிப்பு செய்துள்ளனர். இந்த உலகம் உள்ளவரை அதிமுக இருக்கும் , அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே இருப்பார். சர்வாதிகார அடிப்படையில் அவர்கள் பொதுச்செயலாளர் என அறிவிப்பு செய்துள்ளனர். மாவட்ட செயலாளர்களை விலைக்கு வாங்கினால் தான் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடும் சூழல் உள்ளது .
நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறவில்லை ,
தலைவர் , ஒருங்கிணைப்பாளர் போல ஏதேனும் ஒரு உச்சபட்ச பதவிக்கு தேர்தல்
வைத்தால் அதில் போட்டியிட தயார் என்றுதான் கூறினோம். ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர்.
எம்ஜிஆர் தோற்றத்தில் கண்ணாடியும் , குல்லாவும் அணிந்து எடப்பாடி பழனிசாமி
எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் மன
வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவின் மூலம் மக்கள் அவர்களை ஏற்கவில்லைஎன்பது தெளிவாகியுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கட்சியை கைப்பற்றி விட்டோம் என்ற அகம்பாவத்துடன் நடத்து கொண்டால் தொடர்ந்து தோல்வியைதான் சந்திப்பர். கட்சி நலன் கருதியே நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
சில நேரம் கட்சி பெயர் , சின்னம் யாரிடம் இருக்கிறது என்பது முக்கியத்துவம் பெறும். தொண்டர்களும், மக்களும் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் நிலையானது. அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கான நிரூபணம் நாங்கள்
நடத்தும் மாநாட்டின் மூலம் தெரியவரும். ஜெயலலிதாவின் முழு உருவ வெங்கலச்சிலையை மாவட்டம்தோறும் வைக்க வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும். “ என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்ததாவது..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தன்னம்பிக்கையை தந்துள்ளது .
ஈரோடு கிழக்கு தேர்தலில் எம்ஜிஆர் , ஜெயலலிதா படங்களை பயன்படுத்தியும் பண ,
படை பலத்தை பயன்படுத்தியும் மக்கள் அவர்களை ஏற்கவில்லை . 2024 நாடாளுமன்ற தேர்தலில் மாயை விலகிவிடும் என்று நம்புகிறோம்
.
நாங்கள் இனி மக்கள் மன்றம் செல்ல உள்ளோம். ஏப்ரல்24 ம் தேதி திருச்சியில்
முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. எம்ஜிஆர் , ஜெயலலிதா பிறந்தநாள்
மற்றும் அதிமுக பொன்விழா ஆண்டு என திருச்சியில் முப்பெரும் விழாவை
நடத்துகிறோம். மாநாட்டை தொடர்ந்து பன்னீர் செல்வம் மக்களை நேரில் சென்று
சந்திப்பார். இனி எடப்பாடி பழனிசாமி அணி குறித்து நாங்கள் விமர்சிக்கவோ ,
பேசவோ மாட்டோம்” என தெரீவித்தார்.







