முக்கியச் செய்திகள் இந்தியா

யார் இந்த கபில் சிபல்?

“மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேச, சுதந்திரமான குரலாக இருப்பது முக்கியம். எதிர்க்கட்சியில் மோடி அரசை வலுவாக எதிர்க்கும் வகையில் 2024 ல் கூட்டணி அமைக்க விரும்புகிறோம் . நான் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் சுயேட்சையாக குரல் கொடுக்க வேண்டும் என்று எப்போதும் விரும்பினேன். காங்கிரஸிற்கும் எனக்கும் 31 ஆண்டு கால பந்தம். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதுவும் பேச விரும்பவில்லை. ஆனால், காங்கிரஸூடனான பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ”

இப்படி நெகிழ்வான பதிலை தெரிவித்து ,காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் , முன்னாள் மத்திய அமைச்சர் , தனது வாதங்கள் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்கும் வைக்கும் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல். கடந்த மே 16ம் தேதியே காங்கிரஸ் தலைமைக்கு கபில்சிபல் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருக்கிறார் .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 1948ம் ஆண்டு பிறந்தார் கபில் சிபல். இவரது பெற்றோர் இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் குடியேறினர். புதுடெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை முடித்தார். 1972ல் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட கபில் சிபல் தனது வாதத் திறமையால் வெற்றியை தன்வசமாக்கினார், அவரைத் தேடி வழக்குகள் குவிந்தன.

1983 ல் மூத்த வழக்கறிஞர் ஆனார். 1989 இந்திய அரசால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆக நியமிக்கப்பட்டார். நாட்டின் சூழலுக்கு ஏற்ப பல்வேறு அரசியல் மற்றும் சட்ட விளக்கங்களுடனான கட்டுரைகளை கபில்சிபல் எழுதி இருக்கிறார் . I Witness (2008) மற்றும் My World Within (2012) என்ற இரண்டு கவிதை தொகுப்புகளையும் கபில்சிபல் வெளியிட்டுள்ளார். எண்ணற்ற வழக்குகளில் இவரது சட்ட நிபுணத்துவம் மற்றும் வாதத்தின் மூலம் பெற்ற தீர்ப்புகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பேசு பொருளாகி உள்ளன.

மத்திய குடியுரிமை பணிக்கு தேர்வான போதும் பணியில் சேராமல் வழக்கறிஞராகவே தொடர்ந்தார். சிறந்த சட்ட நிபுணராக அனைத்து தரப்பு வழக்குகளிலும் ஆஜராகி வந்தார். மாட்டு தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக ஆஜராகி அவருக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தார். மேலும் பல வழக்குகளில் லாலுவுக்காக ஆஜரானார். அதற்கு கட்டணம் வாங்காமல் ராஜ்யசபா எம் பி பதவியை பெற்றார்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுத்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் சேரும் போதே எம்.பியாக இருந்தார். 2004, 2009 மக்களவை தேர்தலில் புதுடெல்லி சாந்தினி சௌக் தொகுதியில் இருமுறையும் வென்றார். 2004‌-14 மன்மோகன் சிங் ஆட்சியில் அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், மனித வள மேம்பாடு உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றினார். 2 ஜி வழக்கில் ஆ.ராசா பதவி விலகிய பின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக கபில்சிபல் பொறுப்பேற்றார். 2013- 14 வரை சட்டத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

ராஷ்டிரிய ஜனதா கட்சிக்கு லாலு பிரசாத் யாதவுக்கும் எப்படியோ அதைப் போலவே முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கும் மிகவும் வேண்டப்பட்ட வழக்கறிஞர். சமாஜ்வாதி கட்சி பிரிவின் போது மீண்டும் சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் சிங் யாதவுக்கு பெற்று தந்தவர் கபில் சிபல். அதோடு மட்டுமல்ல தற்போது மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 3 இடங்களில் உத்திர பிரதேசங்களில் போட்டியிடுகிறது. அதில் முதல் சீட்டை அகிலேஷ் யாதவ் ,கபில்சிபலுக்கு பரிசாக அளித்திருக்கிறார். எதற்கு இந்த பரிசு தெரியுமா ? சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சொந்தகாரரான சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம்கான் மீது பல்வேறு வகையான வழக்குகள் போடப்பட்டு அவரது கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தார் . தனது வாத திறமையாலும் ,சட்ட நிபுணத்துவத்தாலும் உச்சநீதிமன்றத்தில் ஆசம்கானுக்கு பெயில் வாங்கி தந்தார் கபில்சிபல் . இதோ ,இப்போது கபில்சிபலுக்கு நன்றி பரிசாக மாநிலங்களவை உறுப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது சமாஜ்வாதி கட்சி.சாந்தி பூஷன். நானா பல்கி லாலா, ராம்ஜெத்மலானி ,கே.கே.வேணுகோபால், பராசரன் , துரைசாமி போன்ற அரிய வரிசையில் இடம் பெறும் அளவுக்கு நீதித்துறையில் அரும்பணியாற்றி வருபவர். குறைந்த விலையில் எளிய மக்கள் பயன்படுத்தும் விலையில் லேப்டாப் கம்ப்யூட்டர், டேப்லெட் கம்ப்யூட்டர் வடிவமைக்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தால் இம்முறை ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினையின் போது பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையோடு இருந்தால் தான் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் .இதனை மனதில் கொண்டு காங்கிரஸ் தலைமை பஞ்சாப் காங்கிரஸ் கட்சி விவகாரத்தை கையாள வேண்டும் என்று வெளிப்படையாக தனது கருத்தை கூறினார். இப்படி காங்கிரஸ் தலைமை குறித்து அதிருப்தி வெளிப்படுத்திய ஜி 23 தலைவர்களில் மிக முக்கியமானவர் கபில்சிபல். ஜி23 தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படையாக முதன் முதலில் டிவிட்டரில் வெளியிட்டவரும் கபில்சிபல் தான். உதய்ப்பூர் சிந்தனை மாநாடுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அறிவித்த 3 முக்கிய குழுக்களில் கபில்சிபல் பெயர் இல்லாத நிலையில் இன்று காங்கிரசிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் பன்மைத்துவத்தை காக்க பாஜகவுக்கு எதிராக 2024 ல் வலுவான கூட்டணியை அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளார் கபில்சிபல் . உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தால் பல வழக்குகளில் வென்ற கபில்சிபலுக்கு 2024 ல் மக்கள் மன்றத்திலும் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காதலி இறந்த சோகம்: ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை

Arivazhagan CM

இலவச வீட்டு மனை பட்டாவில் கை வைத்த கில்லாடிகள் – சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

Web Editor

புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி

Gayathri Venkatesan