முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

கபில் சிபலும் சமாஜ்வாதி கட்சியும்


பால. மோகன்தாஸ்

கட்டுரையாளர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கபில் சிபல் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இதன் பின்னணி என்ன? அவருக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே உள்ள நட்பு எத்தகையது?
விரிவாகப் பார்க்கலாம்…

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் லாகூரில் வசித்து வந்த கபில் சிபலின் குடும்பம், சுதந்திரத்தின்போது அங்கிருந்து இடம்பெயர்ந்து ஜலந்தர் நகருக்கு வந்தது. அங்குதான் 1948ம் ஆண்டு பிறந்தார் கபில் சிபல். பின்னர் அந்த குடும்பம் டெல்லிக்கு இடம் பெயர்ந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டெல்லியில் பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்த கபில் சிபல், தனது தந்தையைப் போலவே வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். வழக்கறிஞர் தொழிலில் புகழ்பெறத் தொடங்கிய கபில் சிபல், 1989 முதல் 1990 வரை மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனராலாக பதவி வகித்தார்.

2004ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கபில் சிபல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கேபினெட் அமைச்சராக பதவி வகித்தார். இதையடுத்து, 2009ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கபில் சிபல், இம்முறை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

10 ஆண்டுகள் மத்திய கேபினெட் அமைச்சராக இருந்த கபில் சிபல், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். காங்கிரஸ் கட்சியின் தொடர் தேர்தல் தோல்விகளால் அதிருப்தி அடைந்த கபில் சிபல், அக்கட்சியின் அதிருப்திக் குழுவான ஜி-23ல் முக்கிய நபராக விளங்கினார்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் அவருக்கு இருந்த முக்கியத்துவம் சரியத்தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கபில் சிபலின் பதவிக் காலம் வரும் ஜூலையில் முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காது என்பதை புரிந்து கொண்ட கபில் சிபல், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

அடுத்த மாதம் 10ம் தேதி மொத்தம் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிலையில், கபில் சிபல் இன்று தனது மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இவர்களில் 7 பேரை பாஜகவும், 3 பேரை சமாஜ்வாதி கட்சியும் உறுதியாக தேர்வு செய்துவிட முடியும்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி கபில் சிபலுக்கு ஆதரவு அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட கபில் சிபல், அக்கட்சியில் இருந்து விலகி இருப்பதும், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவைக்கு போட்டியிடுவதும் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமாஜ்வாதி கட்சி, கபில் சிபலுக்கு ஆதரவு தர பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் இருந்தபோது, அவரிடம் இருந்து கட்சியை தனதாக்கியவர் அகிலேஷ் யாதவ். இதனால், அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே பகை மூண்டது. குடும்பம் இரண்டாக பிரிந்தது. கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டு வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்குச் சென்றது.

2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், அகிலேஷ் யாதவ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் கபில் சிபல். அவரது வாதத் திறமை காரணமாக சைக்கிள் சின்னம், அகிலேஷ் யாதவ்-க்கு கிடைத்தது. இதையடுத்து அகிலேஷ்க்கும் கபில் சிபலுக்கும் இடையே நெருக்கம் அதிகமானது.

அதோடு, சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஆசம் கானுக்கும் கபில் சிபல் நெருக்கம். உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு அமைந்த உடன், ஆசம் கான் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆசம் கானுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் இருந்ததால், அவருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இடைக்கால ஜாமீன் பெற்று நீண்ட சிறை வாசத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறார் ஆசம் கான். அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்க அவருக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் கபில் சிபல்.

கபில் சிபலின் உதவிகளுக்கு பிரதி உபகாரமாகவே அவருக்கு ஆதரவு அளிக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சியின் கருத்தையும், தனது சொந்த கருத்துக்களையும் கபில் சிபல் மாநிலங்களவையில் எதிரொலிப்பார் எனக்கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

நாட்டுக்காக சுதந்திரமாக குரல் கொடுக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ள கபில் சிபல், அவ்வாறு குரல் கொடுப்பது மிகவும் முக்கியம் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“பா.ஜ.கவை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” – வைகோ கண்டனம்!

Halley Karthik

அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் – சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Web Editor

இரட்டை கொலை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Halley Karthik