தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு தலைமைச்செயலாளராக உள்ள இறையன்பு விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் 49 ஆவது தலைமைச்செயலாளர் யார்? என்ற தேடல் தொடங்கியுள்ளது.
“அரசு என்பது முதலமைச்சர் மட்டுமல்ல, அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் இணைந்ததே. இம்மூன்று பகுதிகளும் ஒன்றாக இணைந்து ஒருமுகப்பட்டுச் செயல்படுவதே நல்லாட்சியாக அமைந்திட முடியும்” என சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அரசு நிர்வாகத்தில் தலைமை அதிகாரியாக இருப்பவர் தலைமைச்செயலாளர். அத்தகைய முதன்மையான பதவியை பெற வேண்டும் என்பது ஐஏஎஸ் அதிகாரிகளின் விருப்பமாக இருந்தாலும், அந்த பதவிக்கான அதிகாரத்தை மக்களுக்கானதாக பயன்படுத்தி வரலாற்றில் நிலைகொண்டவர்கள் ஒருசிலரே. அதில் முக்கியமானவராக திகழ்கிறார் இறையன்பு. அவர் ஒய்வுபெறவுள்ள நிலையில், மாநில தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்க்கு விண்ணப்பித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விண்ணப்பம்:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005இல் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால் பதவி காலம் 2022 நவம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோரது பதவிக்காலம் 2022 டிசம்பருடன் முடிவடைந்தது.
மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் பதவிகளுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, தகுதியானவர்களிடம் விண்ணப்பங்களும் கோரப்பட்டன. தேர்வுக்குழு அளித்த தகுதியானவர்கள் பட்டியலை முதலமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொண்ட குழு தேர்வு செய்யும்.
தலைமை தகவல் ஆணையர்:
விண்ணப்பதார்கள் பொது வாழ்க்கையில் நன்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சட்டம், அறிவியல்,தொழில்நுட்பம்,சமூக அறிவியல், இதழியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றில் பொது அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு தலைமைச்செயலாளராக உள்ள இறையன்பு விண்ணப்பித்துள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் அந்த பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தான் தேர்வு செய்யப்பட்டால் தனது ஒய்வு காலமான ஜீன் 16 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஒய்வில் செல்ல முடிவெடுத்துள்ளார் இறையன்பு.
களப்பணியாளர் இறையன்பு:
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு 07.05.2021அன்று இறையன்பு நியமிக்கப்பட்டார். கடுமையான கொரோனா தொற்று பாதிப்பு, புதிய அரசு, பல்வேறு நிலைகளிலும் பொறுப்புகள் மாற்றப்பட்ட புதிய உயர் அதிகாரிகள், பொருளாதார பாதிப்பு என நெருக்கடியான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் 48வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் இறையன்பு.
அறைக்குள் இருந்து ஆணைகளை இடுபவராக இல்லாமல், களத்திற்கு சென்று பணியாற்றுபவராகவும், கடைநிலையில் உள்ள அரசு ஊழியர், மக்கள் மனநிலைக்கேற்ப செயல்பாடுகளை மேற்கொள்பவராக திகழ்ந்துள்ளார். அரசாணைகள் தமிழில் வெளிவரவும், அனைத்துத் துறைகளிலும் யூனிகோட் முறையை பின்பற்றவும் உத்தரவிட்டார். கிராமங்களில் இருந்த தண்டோரா முறையை ஒழித்ததுடன், ஞாயிற்றுக் கிழமைகளிலும் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் தொடர்பாக நேரில் கள ஆய்வுகளை மேற்கொண்டார்.கொரோனா தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்தியது, இளம் அதிகாரிகளுக்கு ஏற்றமளிக்கும் வகையில் வழிகாட்டியது, சாலைகள் போட்டால் பழைய சாலையை தோண்டித்தான் போட வேண்டும் என உத்தரவிட்டு பல ஆண்டு கால வேதனைகளுக்கும் தீர்வுகளை வெளிப்படுத்தினார்.
திட்டங்களை தீட்டுவது மட்டுமல்லாமல் அரசு நிறுவனங்கள் பெயர் சீர்திருத்தம், திட்டங்களுக்கான பெயர்களிலும் தமிழுக்கான முன்னுரிமையை அளித்தார். எவரும் அவரின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டால் தீர்வை நோக்கி பயணிக்கலாம் என்ற நிலையிலேயே செயல்பட்டார்.
சால்வை, பூங்கொத்துகளுடன் தன்னை சந்திக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட இறையன்பு, மழை வெள்ள தடுப்பு பணிகளில் அதிக முனைப்பு காட்டுபவராக திகழ்ந்தார். உழவர்கள், முன்னாள் படைவீரர்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டுபவராகவும், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தாலும், எளிய மக்கள் தன்னை எப்போதும் தொடர்பு கொண்டு தீர்வு பெற உறுதுணையாக இருந்தார். தலைமைச் செயலாளராக இறையன்பின் பணிக்கு தடங்கல் இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலினால் ஊக்கமும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாருக்கெல்லாம் வாய்ப்பு?
மொத்தமாக 31 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச்செயலாளர் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களில் பணி அனுபவம் அடிப்படையில்…
1. 1986 – ராஜஸ்தான் – ஹன்ஸ்ராஜ் வர்மா
2. 1987 – தமிழ்நாடு – சோமநாதன்
3. 1988 – பஞ்சாப் – விக்ரம் கபூர்
4. 1988 – உபி – அதுல்ய மிஸ்ரா
5. 1988 – ஒரிசா – ஜிதேந்திரநாத் ஸ்வெயின்
6. 1989 – புதுக்கோட்டை – எஸ். கிருஷ்ணன்
7. 1989 – திருநெல்வேலி – ராஜாராமன்
8. 1989 – விருதுநகர் – எஸ்.கே.பிரபாகர்
9. 1989 – ம.பி. – சந்தீப் சக்சேனா
10. 1989 – பீஹார் – நசிமுதீன்
11. 1989 – ராஜஸ்தான் – ஷிவ்தாஸ் மீனா
20. 1991 – தமிழ்நாடு – முருகானந்தம்
ஆகியோர் உள்ளனர். அவர்களில் எஸ். கே பிரபாகர், ஷிவ்தாஸ் மீனா, அதுல்ய மிஸ்ரா, எஸ். கிருஷ்ணன், விக்ரம் கபூர் உள்ளிட்டோர் பெயர்களுடன் பணி அனுபவம் அடிப்படையில் 20 ஆவதாக உள்ள முருகானந்தம் என கூடுதல் தலைமைச்செயலாளர் நிலையில் உள்ள 31 பேரில் 20 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியல் தலைமைச்செயலாளருக்கான பெயர் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதில் 3 பேரை தேர்வு செய்வதற்கான திட்டமிடல் தொடங்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகின்றது. விரைவில் தலைமை தகவல் ஆணையர், தலைமைச்செயலாளர் பொறுப்புகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுரையாளர்: இலா. தேவா இக்னேசியஸ் சிரில்