காங்கிரஸின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமான சுனில் கனுகொலு யார்..? – விரிவான அலசல்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமான சுனில் கனுகொலு யார் என்பதை பற்றி  விரிவாக  அலசுகிறது இந்த தொகுப்பு. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம்…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமான சுனில் கனுகொலு யார் என்பதை பற்றி  விரிவாக  அலசுகிறது இந்த தொகுப்பு.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சியே, 135 இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்டமான வெற்றிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே என பல பெயர்கள் காரணமாக சொல்லப்பட்டாலும் இரண்டு நபர்கள் இந்த தேர்தலில் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களில் ஒன்று ”வார் ரூம்” எனப்படும் தேர்தல் பிரச்சாரங்களை இணையத்தில் வெற்றிகரமாக செயல் வடிவம் கொடுத்ததற்கு தலைமை தாங்கிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுக்கும் சுனில் கனுகொலு.

யார் இந்த சுனில் கனுகொலு…??

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பிறந்த சுனில் கொனுகொலு தனது பள்ளிப் படிப்பை தான் பிறந்த ஊரிலேயே முடித்தார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட சுனில் கொனுகொலு சில காலம் சென்னையில் வளர்ந்தார். தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

 

பிரபல தேர்தல் வியூகங்களை வகுக்கக் கூடிய பிரசாந்த கிஷோரின் நிறுவனம் ஐபேக்கைப் போல   மைண்ட்ஷேர் அனல்டிக்ஸ் எனும் நிறுவனத்தை சுனில் கனுகொலு நடத்தி வந்தார்.  பிரசாந்த் கிஷோரும், சுனிலும் ஒரு காலத்தில் அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் பணி செய்தவர்கள். 2011ல் குஜராத்துக்கு பிரசாந்த் கிஷோர் வருவதற்கு முன்பே நரேந்திர மோடியின் ஆலோசகராக செயல்பட்டார் சுனில். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு பல வியூகங்களை அமைத்து  பிரசாந்த்தும், சுனிலும்  இலக்கை எட்டினர்.

2015-ல் பிரசார்ந்த கிஷோருடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக ‘ஐ–பேக்’நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சுனில் 2016ம் ஆண்டு  சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்காக , விடியட்டும்.. முடியட்டும்’ உள்ளிட்ட மக்களை ஈர்க்கும் தேர்தல் செயல்திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். அத்தேர்தலில் திமுக ஆட்சியமைக்காவிட்டாலும், 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பலமான எதிர்க்கட்சி என்ற பெயரை பெற்றது.

இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்காக பணியாற்றினார். இதனையடுத்து 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 க்கு 39 இடங்களில் வெற்றி பெற சுனிலின் தேர்தல் வியூகமும் காரணம் என கூறப்பட்டது.

2020 ஆம் ஆண்டு முதல் அதிமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டார். 2021 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க ஒப்பந்தம் போட்டார். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்காவிட்டாலும் 66 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கு முன்னேற சுனிலும் முக்கிய காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.

இந்த நிலையில்தான் தற்போது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக வியூகங்கள் அமைக்கவும் , மக்களை கவரும் தேர்தல் பிரச்சாரங்கள், எளிமையான கட்சியின் கொள்கை முழக்கங்கள், தேர்தல் வாக்குறுதிகள் என அனைத்திலும் சுனில் கனுகொலுவின் பங்கு முக்கியமானது.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்ததாக சொல்லப்பட்ட ராகுல் காந்தியின் “இந்திய ஒற்றுமை பயணத்திற்கும்” வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் சுனில் .

கடந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான அழைப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்த பிறகு, இந்தியா முழுவதும் பல்வேறு தேர்தல்களுக்கு கட்சியின் தேர்தல் வியூகங்களுக்கு உதவுவதற்காக சுனில் கனுகோலு காங்கிரஸின் குழுவில் கொண்டு வரப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம், உதய்பூரில் நடைபெற்ற நவ் சங்கல்ப் (புதிய தீர்மானம்) பிரகடனத்தை நிறைவேற்றுவதற்காக காங்கிரஸால் உருவாக்கப்பட்ட  முக்கியமான குழுவில் சுனில் இடம்பெற்றார்.  இக்குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கன், பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா போன்ற முக்கிய தலைவர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.