இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக உள்ள நிலையில், அந்நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பதவி விலகியுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலக போரிஸ் ஜான்சன் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பாலியல் குற்றச்சாட்டுக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளான முன்னாள் அமைச்சரான கிறிஸ்டோபர் பின்ச்சர் என்பவரை துணை தலைமை கொறடாவாக, பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்ததை அடுத்து அவருக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, பின்ச்சர் நியமனத்திற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்க மன்னிப்பு கோரினார். எனினும், பின்ச்சரின் பின்னணி குறித்து ஜான்சனுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் தெரிந்தே அவர் தவறிழைத்துள்ளார் என்றும் இது அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு எதிரானது என்றும் கூறி நிதி அமைச்சர் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து சுகாதரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார். வடக்கு அயர்லாந்து அமைச்சர் பிராண்டன் லீவிஸ், மற்றொரு நிதி அமைச்சர் ஹெலன் வாடெலி, பாதுகாப்பு அமைச்சர் டாமியன் ஹிண்ட்ஸ் உள்பட பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இதுவரை தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில், ரிஷி சுனக்கின் பெயரே முதலிடத்தில் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பேரிடர் காலத்தின்போது நாட்டின் நிதி அமைச்சராக இருந்து அவர் செயல்படுத்திய பல்வேறு கொள்கைளே நாட்டை பொருளாதார ரீதியில் காப்பாற்றியதாக தொடர்ந்து புகழப்பட்டு வருபவர் ரிஷி சுனக். அதோடு, பேரிடர் காலத்தில், தொழிலதிபர்கள் மற்றும் பணியாளர்களின் நலன்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
ரிஷி சுனக் இந்திய வம்வாளியைச் சேர்ந்தவர். இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி– சுதா மூர்த்தி தம்பதியரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.












