எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக் குழு நடத்தினால் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் எச்சரித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமையை விரும்பும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதனை நிலைநாட்டுவதற்காக வரும் 11ந்தேதி பொதுக்குழுவை கூட்டியுள்ளனர். அதற்கான பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் இவ்வாறு பொதுக்குழு கூட்டுவது அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது என கொந்தளிக்கும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் தரப்பினர், ஜூலை 11ந்தேதி பொதுக்குழு நடத்துவதை தடுத்து நிறுத்த சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் , குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், வரும் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டியுள்ளது சட்டவிதிகளுக்கு முரணானது எனக் கூறினார். இவ்வாறு விதிகளை மீறி பொதுக் குழுவைக் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றினால், மீண்டும் தேர்தல் ஆணையத்தை நாடி புகார் அளிப்போம் என வைத்திலிங்கம் எச்சரித்தார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்த பிறகு தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.







