கேரளத்தின் புதிய முதலமைச்சர் யார்…? இன்று அறிவிக்கும் காங்கிரஸ்…!

கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டை போலவே கேரளத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பெற்றுள்ளது. இதன் மூலம் கேரளத்தில் 10 ஆண்டுகால சிபிஎம் ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற கேரள காங்கிரஸில் இருந்து முதலமைச்சராக யார் பதவியேற்பது என்ற குழப்பம் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளும் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனாலும் முதலமைச்சர் தேர்வுக்கான இழுபறி தீரவில்லை.

இதையடுத்து கேரளத்தின் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அதன்படி சுதாகரன். முரளிதரன், சுதீரன், எம்.எம்.அசன். முல்லப் பள்ளி ராமச்சந்திரன், ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘கேரளத்தின் புதிய முதலமைச்சர் என்பது குறித்து நாளை (அதாவது இன்று) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.