தேர்தல் பத்திரம் – யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள்! எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன – பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்கள், பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றியுள்ளன போன்ற விவரங்கள்…

எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்கள், பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றியுள்ளன போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் பத்திர விவரங்களை வழங்க கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சந்திரசூட்,  நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜெ.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11-ம் தேதி நடைபெற்றது.

அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ. மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும். அந்த விவரங்களை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். உத்தரவை செயல்படுத்த தவறினால், எஸ்.பி.ஐ. அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கடந்த மார்ச் 12-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இன்று (மார்ச் 14) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் 2019 ஏப்ரல் முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வழங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன. மேலும் தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், வேதாந்தா நிறுவனம், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், டி.வி.எஸ் நிறுவனம், சன் ஃபார்மா, மேகா இன்ஜினியரிங், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பினான்ஸ், பாரதி ஏர்டெல், பாரதி இன்ப்ரா டெல், பினோலெக்ஸ் கேபிள் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை நன்கொடைகளாக வழங்கி உள்ளன. மேலும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டி.எல்.எஃப் நிறுவனமும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.