தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அவர் பேசுகையில், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் வெளி நடப்பு செய்தனர். இருப்பினும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.
இதனையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது:
திமுகவினர் ஒவ்வொரு துறையிலும் 20 நபர்களை வைத்து வசூல் செய்தார்கள் . எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கும் நாங்கள் நேரம் கேட்டோம். அவரை தொடர்பு கொள்ளும் பொழுது உட் கட்சிப் பிரச்சினை உள்ளது. இந்த நேரத்தில் சந்திப்பது நன்றாக இருக்காது என்றனர்.
நாங்கள் அதிமுக ஆதரவோடு ஆட்சி அமைக்கவில்லை. சட்டமன்றத்தில் எங்களுக்கு இருந்த 120 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவில் தான் நாங்கள் ஆட்சி அமைத்தோம்.
மின்சாரத் துறையில் இருந்து வெள்ள அறிக்கையானது வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும். நான் முதல்வன் திட்டத்தினால் அதிகாரிகளிடம் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கான பெயர் தான் மாற்றப்பட்டுள்ளன தவிர திட்டங்களை முடக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.




