கோலிவுட்டில் இந்த வாரம் வெளியான ஆர்யா, சரத்குமார், கவுதம்ராம்கார்த்திக் நடித்த மிஸ்டர் எக்ஸ், புதுமுகங்கள் நடித்த ரூம்பாய், டொவினோதாமஸ், கயாடுலோஹர் நடித்த பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ.
மிஸ்டர் எக்ஸ்:
ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வரவழைத்து சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தை தகர்க்க நினைக்கிறார் வில்லன் கவுதம்ராம்கார்த்திக். காரணம், அந்த சமயத்தில் சென்னையில் இந்திய பிரதமர் தலைமையில் 20 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஒரு மாநாடு நடக்கிறது. இதை புரிந்துகொண்டு இந்தியா ரா பிரிவு அதிகாரி மஞ்சுவாரியரும், உளவாளி ஆர்யாவும் அதை எப்படி தடுக்கிறார்கள் என்பது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான மிஸ்டர் எக்ஸ் படத்தின் கதை.
உளவாளிகள் பற்றி பல கதைகள் வந்திருந்தாலும், 7 உண்மை சம்பவம் பின்னணியில் இந்த கதை உருவாகி இருப்பது சிறப்பு. உளவாளியாக அருமையாக நடித்து இருக்கிறார் ஆர்யா. அவரின் காதல் காட்சி, பிளாஷ்பேக் குடும்ப காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சிறப்பு. என்ன, நடிப்பில் இன்னும் உற்சாகம் காண்பித்து இருக்கலாம். எக்ஸ்பிரஷனில் அழுத்தம் காண்பித்து இருக்கலாம். வில்லனாக மாறியிருக்கும் கவுதம்ராம்கார்த்திக் நடிப்பும் கதைக்கு செட்டாகி இருக்கிறது. அவரின் வில்லத்தனமான கேரக்டர், கெட்அப், சில செயல்கள் மிரட்டல். படத்தின் பிற்பாதியில் அவர்தான் ஸ்கோர் செய்து இருக்கிறார். ரா அதிகாரியாக வரும் மஞ்சுவாரியரும் கம்பீரமான நடிப்பு, கிளைமாக்சில் சண்டை என மிரட்டி இருக்கிறார்.
ஆர்யா காதலியாக, டாக்டராக வந்து அளவாக நடித்திருக்கிறார் அனகா, அழகாக இருக்கிறார் ஒரு வித்தியாசமான வேடத்தில் வரும் ரைசாவில்சன். இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட வேடம் அதுல்யாவுக்கு . இவர்களை தவிர வயதான வேடத்தில், இளமையான வேடத்தில் கதையில் ஒரு பவர்புல் கேரக்டராக, கிளைமாக்சில் இன்னொரு சர்ப்பிரஸை் கொடுப்பவராக சரத்குமாரும் வருகிறார். காளிவெங்கட் உருக்கமான நடிப்பை தந்து இருக்கிறார். இப்படி படத்தில் ஏகப்பட்ட கேரக்டர் படத்தின் முதல்பாகம் கொஞ்சம் ஸ்லோவாக ஓடுகிறது. பல திருப்பங்கள் இருந்தாலும் திரைக்கதையில் வேகம் இல்லை. அதுவே படத்துக்கு மைனஸ் ஆக இருக்கிறது. அடுத்த பாகம் பரபரப்பாக ஓடுகிறது. சரத்குமார் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் சென்டிமென்ட் தாக்கம்.
அந்த கிளைமாக்ஸ் பைட்தான் படத்தின் ஹைலைட். அந்த அரை மணி நேரம் நடக்கும் அதிரடி சம்பவங்கள் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. ஆனாலும், இந்த மாதிரியான உளவாளி கதைக்கு ஏற்ற பின்னணி இசை இல்லை. திபுநினன்தாமஸ் ஏமாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் அருள் உழைப்பு தெரிகிறது. ஒரு அணு ஆயுத மூலப்பொருளை கடத்தும் வில்லன், பேரழிவை ஏற்படுத்தும் செயல், அதை தடுக்கும் உளவு பிரிவு என அருமையாக கதை இருந்தாலும், அதற்கான விறுவிறுப்பு, பரபரப்பு மிஸ்சிங். நிறைய தேவையற்ற சீன்கள், கதை ஓட்டத்தை தடுக்கிறது. ஏகப்பட்ட கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்
ஆனாலும், உளவாளிகள் செயல்கள், அவர்களின் தியாகம் அவர்களின் தேசப்பற்றை சொன்னவிதத்தில் இயக்குனர் மனதில் நிற்கிறார். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மாற்றம் செய்து இருந்தால் ஹாலிவுட் படம் மாதிரி வந்து இருக்கும்.
ரூம்பாய்:
ஜெகன் ராயன் இயக்கத்தில் புதுமுகம் நிகில் நடித்திருக்கும் படம். தலைப்புக்கு ஏற்ப ஏலகிரியில் ஒரு ஓட்டலில் ரூம்பாய் ஆக இருக்கிறார் ஹீரோ. அந்த ஓட்டல் மானேஜராக இருப்பவர், ரூமில் ரகசிய கேமரா பொருத்தி வைத்து தவறான செயல்களை செய்கிறார். அதை தெரிந்து கொண்டு அந்த ரகசிய அறைக்கு செல்லும் ஹீரோவுக்கு கடும் அதிர்ச்சி. அப்போது நடக்கும் சண்டையில் மானேஜரை கொல்கிறார். இன்னொரு பக்கம் கூர் நோக்கு இல்ல கண்காணிப்பாளர் காணாமல் போகிறார். அந்த சம்பவத்தில் ஹீரோவை போலீஸ் தேடுகிறது. மானேஜரை கொன்றதால் வில்லன் கும்பலும் அவரை துரத்துகிறது. ஹீரோ தப்பித்தாரா? இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பின்னணி என்ன? எங்கே கதை இணைகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை திரில்லர் பாணியில் பரபரப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.
ஏலகிரி சம்பந்தப்பட்ட சீன்கள், ஹீரோயின் ஓட்டல் காட்சிகள், நட்பு, காமெடி, காதல் நன்றாக வந்துள்ளது, இடைவேளைக்குபின் கதை வேறு திசைக்கு மாறுகிறது. திருப்பங்கள், வில்லன் அட்டகாசம், சேசிங், கொலை, பழி வாங்கல் என செல்கிறது. ஹீரோ, வில்லன் டீம் மோதல், காணாமல் போன இன்னொருவர் குறித்த தகவல் பிரஷ் ஆக இருக்கிறது. கள்ளக்காதல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும், ஓட்டல் ரூமில் ரகசிய கேமராவால் எப்படிப்பட்ட மிரட்டல் நடக்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி.
காதல் காட்சி பெரிதாக இல்லை என்றாலும், குடும்ப சென்டிமென்ட், அப்பா பாசம், தங்கச்சி பாசம், தவறான உறவு என பல விஷயங்களை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். புதுமுகங்கள் பலர் நடித்து இருந்தாலும் விறுவிறுப்பு இருக்கிறது. ஹீரோ அமைதியாக நடிக்க, வில்லன், அவர் டீம் சவுண்டு விட்டு துரத்துகிறார்கள். இனி ஓட்டல் ரூமில் தங்கும்போது எங்கேயாவது ரகசியமான கேமரா இருக்கிறதா என்ற சோதனை செய்ய வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்ற கருத்தையும், கள்ளக்காதலால் பிரச்னை நிச்சயம் என்ற கருத்தையும் அடித்து சொல்கிறது ரூம்பாய் கதை.
பள்ளிச்சட்டம்பி:
மலையாளத்தில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் டொவினோ தாமஸ், கயாடுலோஹர் நடித்துள்ளனர். 1950களின் இறுதியில் கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் வந்தபோது, கிறிஸ்துவ சபை களின் சொத்து பறிக்கப்படலாம் என பயம் வந்தபோது, சபை சொத்துகளை பாதுகாக்க கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக டொவினோ நியமிக்கப்படுகிறார்.
பள்ளிச்சட்டம்பி என்றால் திருச்சபை காவலர் என அர்த்தம்.அவர் அதை செய்தாரா, அவர் கம்யூனிஸ்ட் கொள்கையால் மாறினாரா என்பது கதை. டொவினோ தாமஸ் நடிப்பு, சில காட்சிகள் தவிர மற்றவை மைனஸ். அந்தகால அரசியல் நிலை, படத்தின் போக்கு, இயக்குனர் சொல்லும் விஷயங்கள் பலருக்கு பிடிபடவில்லை. கயாடு, டொவினோ காதல் காட்சிகள், கிளைமாக்ஸ் செட் ஆகவில்லை. டொவினாதாமஸ் சினிமா வாழ்க்கையில் இந்த படம், கதை பின்னடைவு.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்.












