நாடாளுமன்ற கூட்டத்தொடர் எங்கே நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பழைய நாடாளுமன்றத்தில் முதல் நாளும் அடுத்த நாள் முதல் புதிய நாடாளுமன்றத்திலும் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 5 அமர்வுகளாக இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த சிறப்பு கூட்டத் தொடர் என அரசியல் கட்சிகள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய அடுத்த நாளே “ஒரே நாடு, ஒரே தேர்தல் “ தொடர்பாக ஆய்வு செய்ய குழுவை அமைத்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் செளத்ரி, முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதித்துறை அமைச்சர் என்.கே. சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோர் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். இந்த குழுவில் இணையமாட்டேன் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம், ஜீரோ நேரம் மற்றும் தனிநபர் மசோதா போன்றவை இருக்காது என தகவல்கள் வெளியாகின. மேலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் வரும் 18ம் தேதி பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனவும், 19ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மே 28ம் தேதியே பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த நிலையில் மழைகால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே நடைபெற்றது. இந்த நிலையில் செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய கட்டடத்தில் கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







