இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, கோவை, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.